பிரதமர் மோடியை திட்டிய பாஜக எம்.பி மேனகா குமாரி எனத் தவறாகப் பரப்பப்படும் காங்கிரஸ் பேச்சாளரின் வீடியோ

பரவிய செய்தி
இந்தியாவின் பிரதமர் மோடியை பகிரங்கமாக விமர்சிக்கும் பாஜகவின் மேனகா குமாரி எம்பி*.! Menaka Kumari BJP MP. Is FIRING to Her Own Party Leadership
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா உறுப்பினரான மேனகா காந்தியின் பெயரை மேனகா குமாரி என்று தவறாகக் குறிப்பிட்டு, பாஜகவின் மேனகா காந்தியே பிரதமர் மோடியைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
*இந்தியாவின் குருட்டு கபோதி பிரதமர் மோடி என பகிரங்கமாக விமர்சிக்கும் பாஜகவின் மேனகா குமாரி எம்பி*.!
Menaka Kumari…BJP MP. Is FIRING to Her Own Party Leadership 🥰🥰🥰
வீடியோ :3:31 pic.twitter.com/LDZ0bzfjVq— LIMA_B2_044 (@044_b2) May 12, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதன் உண்மையான வீடியோ 2021 ஏப்ரல் 20 அன்று Dolly Sharma என்பவரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவில் டோலி சர்மா, “ஒருவருக்கொருவர் உதவுங்கள். மனிதநேயமே மிகப்பெரிய மதம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இந்தியனாக உயர்ந்து இருங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஏதாவது செய்யுங்கள்.” என்று கூறியதோடு, நோயாளிகளின் மோசமான நிலை குறித்து அங்குள்ள DM , CMO மற்றும் மருத்துவர்களிடம் அவர் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
எனவே இதன் மூலம் அவர் பேசியுள்ள 22:54 நிமிட வீடியோவில், 14.15 நிமிடங்களில் இருந்து மட்டும் தனியாக எடுக்கப்பட்டு, தற்போது பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் அவர் குறித்துத் தேடியதில், உத்தரப் பிரதேசத்தின் 2019 லோக்சபா தேர்தலின் போது காசியாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பதை அறிய முடிந்தது. இது குறித்த செய்திகளை 2019 ஏப்ரல் 09 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தனது பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் AICC பேச்சாளராகவும் உள்ளார் என்பதை அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இதன்மூலம் வைரலாகி வரும் வீடியோவுக்கும் பாஜக தலைவர் மேனகா காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும், இவ்வாறு தகவல் பரவுவது குறித்தும், பரவி வரும் வீடியோ குறித்தும் 2022 ஜனவரி 15 அன்று டோலி சர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் கொரோனா காலத்தில் அரசை விமர்சித்துப் பேசிய வீடியோவை மர்ம நபர்கள் சிலர் பாஜகவைச் சேர்ந்த மேனகா காந்தியின் வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். நான் அதில் மேனகா காந்தி என்று அவருடைய பெயரைக் கூட குறிப்பிடவில்லை” என்றுக் கூறி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வீடியோ 2022-இல் இருந்தே தவறாக பரவி வருவதை அறிய முடிகிறது.
मेरी ये विडीओ पहले भी मेनका गांधी के नाम से वाईरल की गयी, जिसके चलते मुझपर पीलीभीत में केस भी किया गया और अब दोबारा ये विडीओ फैलायी जा रही है , इसका पूरा विडीओ आप मेरे फ़ेस्बुक पेज पर देख सकते हैं, मैंने कहीं मेनका गांधी जी का नाम तक नही लिया ,ये करोना की दूसरी लहर में 1/2 pic.twitter.com/ixMLDjvgSr
— Dolly Sharma (@dollysharmaINC) January 15, 2022
முடிவு:
நம் தேடலில், பிரதமர் மோடியை திட்டிய பாஜக எம்பி மேனகா காந்தி எனப் பரவும் வீடியோ தவறானது. வைரலாகி வரும் வீடியோவில் இருப்பவர் பாஜக தலைவர் மேனகா காந்தி இல்லை என்பதையும் இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலி சர்மா என்பதையும் அறிய முடிகிறது.