பாலியல் குற்றவாளியை சவூதி சென்று கைது செய்த கேரளா ஐபிஎஸ் அதிகாரி !

பரவிய செய்தி
கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பதுங்கி இருந்த குற்றவாளியை, வெளிநாட்டிற்கே நேரடியாக சென்று பல சிரமங்களை தாண்டி, திட்டமிட்டு குற்றவாளியை பிடித்து வந்த கேரளா கொல்லம் கமிஷனர் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ்.
மதிப்பீடு
விளக்கம்
கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த 38 வயதான சுனில் குமார் பத்ரன் என்பவர் சவூதி அரேபியாவில் டைல்ஸ் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுனில் குமார் மூன்று மாதங்களாக தன் நண்பரின் மகளான 13 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சுனில் என்பவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி முதலில் தன் பெற்றோரிடம் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். பின்னர் சில மாதங்களில் தன் பெற்றோரிடம் தனக்கு நடந்ததைப் பற்றி கூறிய பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்நேரத்தில், சுனில் குமார் சவூதிக்கு தப்பித்து சென்றுள்ளார்.
அதன்பிறகு அச்சிறுமி கொல்லம் மாவட்டத்தில் கரிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், 2017 ஜூன் மாதத்தில் மனம் உடைந்த போன சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பாக, சுனில் குமாரை சிறுமியின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்த சிறுமியின் உறவினரும் தற்கொலை செய்து கொண்டார்.
2017-ல் அளிக்கப்பட்ட வழக்கில் சுனில் குமார் தொடர்பாக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியது கொல்லம் போலீஸ். சர்வதேச இன்டர்போல் போலீஸிற்கு தகவல் அளித்தும் பயனில்லை. ஆகையால், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், 2019 ஜூனில் கொல்லம் கமிஷனராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசித்தட்டி எடுத்தார்.
அதில், சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து குற்றவாளி தப்பித்து இரண்டு வருடங்களாக சவூதியில் இருப்பதை அறிந்த பிறகு சுனில் குமாரை கைது செய்யும் முயற்சியை மேற்கொண்டார். சவூதியில் உள்ள குற்றவாளியை கைது செய்ய பிற அதிகாரிகளை அனுப்பாமல், கொல்லம் கமிஷனர் மெரின் ஜோசப் மற்றும் அவரது குழு நேரடியாக சவூதியில் உள்ள ரியாத்துக்கு சென்றதாக ஜூலை 17, 2019-ல் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தேவையான அனுமதி, ஆவணங்கள் மற்றும் சிபிஐ-யின் உதவி என முறையாக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளி சுனில் குமார் பத்ரனை மெரின் ஜோசப் மற்றும் அவரின் குழு திட்டமிட்டு கைது செய்து உள்ளனர்.
പ്രായപൂര്ത്തിയാകാത്ത പെണ്കുട്ടിയെ പീഡിപ്പിച്ച കേസിലെ പ്രതി സുനില് കുമാര് ഭദ്രനെ സൗദി ഇന്റര്പോളിന്റെ സഹായത്തോടെ കൊല്ലം പൊലീസ് കമ്മീഷണര് ശ്രീമതി. മെറിന് ജോസഫ് IPS ന്റെ നേതൃത്വത്തിലുള്ള സംഘം സൗദി അറേബ്യയിലെ റിയാദിലെത്തി അറസ്റ്റ് ചെയ്തു. pic.twitter.com/qja64gc9Ps
— Kollam City Police (@KlmCityPolice) July 18, 2019
குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலை கொல்லம் போலீசார் ட்விட்டரில் ஜூலை 18-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.
திரைப்படங்களில் வரும் காவல் அதிகாரிகள் போன்று குற்றவாளியை கைது செய்ய மெரின் ஜோசப் ஐபிஎஸ் செயல்பட்டதாக பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. அவரின் முயற்சிக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.