மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மோடி சொன்ன பொய்!

பரவிய செய்தி

பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்குவதால் மெட்ரோவில் பயணிக்க கூடியவர்களில் 50 சதவீதத்தினரை நீக்கிவிட்டார்கள். – பிரதமர் நரேந்திர மோடி

Youtube Link

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா டுடே ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். அந்நேர்காணலில், நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படுகிறது. அதே நேரத்தில் சில அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து சேவையை வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோவில் பயணிக்க கூடியவர்களில் 50 சதவீதத்தினரை நீக்கிவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். 

உண்மை என்ன?

மகளிருக்குக்  கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தோம். 

டெல்லியில் 2019ம் ஆண்டு முதல் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டம் செயல்படுத்திய பிறகு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். 

டெல்லி மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தொடர்பாக ’இந்துஸ்தான் டைம்ஸ்’ கடந்த ஜனவரி மாதம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி 2019ம் ஆண்டு சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அவ்வாண்டு ஒட்டு மொத்தமாக 185 கோடி பேர் டெல்லி மெட்ரோவில் பயணித்துள்ளனர். 

அதற்கடுத்த 2020, 2021ம் ஆண்டுகள் கோவிட் கட்டுப்பாடுகள் இருந்ததினால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீங்கியதும் மீண்டும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடைசியாக 2023ம் ஆண்டு சுமார் 200 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். அவ்வாண்டு சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்ச பேர் பயணம் செய்துள்ளனர். 

சென்னை மெட்ரொ: 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 2021ம் ஆண்டு மகளிருக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா சேவை கொண்டுவரப்பட்டது. பிறகு இத்திட்டம் ‘விடியல் பயணத் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. 

ஒவ்வொரு மாதமும் சென்னை மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்து மெட்ரொ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருந்த தரவுகளைத் தொகுத்ததில், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிய முடிந்தது. 

சென்னை மெட்ரோவில் 2021ம் ஆண்டு ஒட்டு மொத்தமாக 2.54 கோடி பேர் பயணித்துள்ளனர். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து 2023-ல் 9.11 கோடியாக உயர்ந்துள்ளது. 

2024ம் ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையைக் கொண்டு ’தி இந்து’ தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 

இப்படி பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்குப் பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை ஒரு காரணமாக இருக்கக் கூடுமென மெட்ரோ அதிகாரி தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டும் இந்த சரிவு உள்ளதா என ஆய்வு செய்தோம். 

கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் 70.15 லட்சமாக இருந்த பணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 66.85-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் 2023, ஏப்ரலில் 66.85 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2024, ஏப்ரலில் சுமார் 14 லட்சம் அதிகரித்து 80.87 லட்சமாக இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு பள்ளி கல்லூரி விடுமுறை மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்துள்ளது.

Source: CMRL

இதேபோல் பிற காரணங்களையும் ஆய்வு செய்து வருவதாக அவ்வதிகாரி சொன்னது தி இந்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Last-mile connectivity அதாவது மெட்ரோ ரயில் நிலையங்களை ஒருவர் சென்றடையக் கூடிய போக்குவரத்து எளிதாக இல்ல என்றும் இதனைச் சரி செய்யவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகக் கூறியுள்ளார். 

மேற்கண்ட தரவுகளிலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால் டெல்லி மற்றும் சென்னை மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதை அறிய முடிகிறது. அவரவர்களின் தேவை மற்றும் வசதியை பொருத்து தங்களுக்கு ஏற்ற போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துகின்றனர். 

இதே நேரத்தில் ஹைதரபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் எல்&டி நிறுவனம் 2026ம் ஆண்டுக்கு பிறகு இத்திட்டத்தை விற்பதற்குப் பரிசீலிப்பதாக அதன் நிறுவன இயக்குனர் ஷங்கர் ராமன் கூறியதும் கவனிக்க வேண்டியுள்ளது. ஷங்கர் ராமன் ஒரு தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர். அவர் இலாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் நலத் திட்டத்திற்கு எதிராகப் பேசுவது ஆச்சரியத்திற்கு உரியது அல்ல. ஆனால், அதே போன்ற கருத்தைப் பிரதமரும் பேசுவது எந்த வகையில் சரி. 

முடிவு: 

சில அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது எனப் பிரதமர் மோடி பேசியது தவறான தகவல். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் வழங்கப்பட்ட பிறகும் சென்னை மற்றும் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துத்தான் உள்ளது. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader