This article is from Jun 20, 2019

மெக்சிகோ நாட்டில் எரிவாயு ஆலையில் நிகழ்ந்த விபத்து !

பரவிய செய்தி

மெக்சிகோவில் நடந்த மீத்தேன் விபத்து. தமிழும் தமிழ்நாடும் வேண்டும் என்றால் மற்றதை விட்டுவிட்டு முதலில் இதை பகிருங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

2012-ல் மெக்சிகோ நாட்டில் ஸ்டேட் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனமான பேமேக்ஸ் உடைய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் வீடியோக்கள் தற்பொழுது பரவி வருகின்றன. 2017 புள்ளிவிவர வருடாந்திர புத்தகத்தில் அந்நிறுவனத்தின் உற்பத்தியில் மீத்தேனின் பங்கும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஜனவரி மாதத்திலும் பேமேக்ஸ் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்களின் தடம் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 79-ஐ தாண்டியது.

விளக்கம்

மீத்தேன் குறித்த அச்சங்கள் ஓய்ந்தபாடில்லை. மீத்தேன் விபத்தால் நிகந்த பாதிப்புகள் என புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை பார்க்கலாம். இந்நிலையில், மெக்சிகோவில் நடந்த மீத்தேன் விபத்து என ஓர் வீடியோ ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

அவ்வாறு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ பதிவுகள் 2012-ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில் Reynosa நகரம் அருகே அமைந்திருந்த பேமேக்ஸ் எனும் ஸ்டேட் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் எரிவாயு ஆலை(Gas Plant) வெடித்த பொழுது எடுக்கப்பட்டவையாகும். இந்த வீடியோ காட்சிகள் Youtube தளத்தில் 2012 Gas plant explosion Mexico என்ற தலைப்பில் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த விபத்திற்கான காரணங்கள் தெரியாமல் போகின.

இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மெக்சிகோவில் உள்ள எரிபொருள் குழாய்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2019-ல் பேமேக்ஸ் நிறுவனத்தின் எரிபொருள் குழாய் தடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 76 பேர் உயிரிழந்தனர் என செய்திகளில் வெளியாகி உள்ளது.

தற்பொழுது வெடித்த குழாய் தடம் பெட்ரோல் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்பவையாகும். அப்பகுதியில் எரிபொருள் திருடும் கும்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் வரையில் நிறுத்தி வைக்கப்பட்ட குழாய்கள் ஜனவரி 16-ல் மீண்டும் திறக்கப்பட்டன. இதனை அறிந்து கொண்டு எரிபொருள் திருட்டு கும்பல் குழாய்கள் வழித்தடத்தில் துளையிட்டு எரிபொருளை எடுத்த பிறகு தீ விபத்து நிகழ்ந்து இருக்கும் என பேமேக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

1984 மற்றும் 2012-ல் எரிவாயு ஆலையிலும், 2019-ல் எரிபொருள் குழாய் தடத்திலும் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் எடுக்கும் பேமேக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியில் மீத்தேனின் பங்கும் இருக்கிறது. பேமேக்ஸ் நிறுவனத்தின் statistical yearbook 2017-ல் மீத்தேன் உற்பத்தி பற்றி இடம்பெற்றுள்ளது.

2018-ல் மும்பையில் பாரத் பெட்ரோலியம் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். அந்த செய்தியுடன் மெக்சிகோ நாட்டின் வீடியோ தவறாக பகிரப்பட்டு உள்ளது. மேலும், சவூதி அரேபியாவில் நிகழ்ந்த தாக்குதல் என்றும் தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு :

தற்போது வைரலாகும் வீடியோ 2012-ல் பேமேக்ஸ் நிறுவனத்தின் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட விபத்தாகும். 2019-ல் நடந்தது எரிபொருள் குழாய்களின் வழித்தடத்தில் நிகழ்ந்த தீ விபத்தாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader