நியூயார்க்கில் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தின் பாடல் இசைக்கப்பட்டதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி நடித்த அன்பே வா என்ற தமிழ் திரைப்படத்தில் இருந்து இசை. இசைக்கு மொழி கிடையாது. நியூயார்க் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் விளையாடினார்.Twitter link
மதிப்பீடு
விளக்கம்
எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரம்மா எனப் பலரும் நடித்து 1966ல் வெளியான ‘அன்பே வா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற பாடலை நியூயார்க்கில் உள்ள பில்ஹார்மோனிக் இசைக்குழுவினர் இசைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் இசையின் ஒலிக்கும், வாசிப்பவர்களின் அசைவுகளுக்கும் ஒத்துப் போகாமல் இருப்பதைக் காண முடிகிறது. எனவே அந்த வீடியோவின் கீஃப்ரேம்களை வைத்து மேற்கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Vimalpercy’ எனும் யூடியுப் பக்கத்தில் 2021, ஆகஸ்ட் 15ம் தேதி பரவக் கூடிய இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அந்த வீடியோவை பதிவிட்டவர் அதன் நிலைத்தகவலில் (Description) இசையின் காட்சிகளுக்காக நான் பயன்படுத்தி இருந்த ஆர்கெஸ்ட்ரா வீடியோவை மங்கலாக்கியுள்ளேன். யாரையும் தவறாக வழிநடத்துவது எனது நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொண்டு பரவக் கூடிய வீடியோவில் உள்ள இசை நிகழ்ச்சி காட்சிகள் குறித்துத் தேடினோம். பெண் ஒருவர் வயலின் வாசிக்கும் வீடியோ 2013ம் ஆண்டு ‘ahmed hermessi’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில், “Hilary Hahn Mozart Violin Concerto” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜாவின் பார்வை என்ற பாடலுக்கு இசைக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் பரவக் கூடியதில் உள்ள வேறு சில காட்சிகள் வேறு சில வீடியோக்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது. ‘BRASS of the Royal Concertgebouw Orchestra’ என்ற யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோக்கள் உள்ளன. இந்த வீடியோக்களை எல்லாம் எடிட் செய்து, அதன் பின்னியில் எம்.ஜி.ஆர். பாடல் இருப்பது போல உருவாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க : உலக சினிமா பற்றி ஆக்ஸ்ஃபோர்ட் வெளியிட்ட புத்தகத்தில் எம்.ஜி.ஆர் பெயர் மட்டும் உள்ளதா ?
மேலும் படிக்க : எம்.ஜி.ஆர் இயக்குநர் வி.சாந்தாராம் காலில் விழும் புகைப்படத்தை தவறாகப் பரப்பும் திமுகவினர் !
முடிவு :
நம் தேடலில், நியூயார்க்கில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற பாடலை இசைக்கலைஞர்கள் இசைத்ததாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது வேறு சில வீடியோக்களை ஒன்றாக எடிட் செய்து, அதன் பின்னணியில் அந்த பாடல் ஒலிப்பது போல் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.