எம்.ஜி.யார் கையால் செங்கோலை வாங்கியது எடப்பாடி பழனிச்சாமியா ?

பரவிய செய்தி
படத்தில் புரட்சி தலைவரிடம் செங்கோலை புரட்சித்தலைவி கொடுக்க புரட்சித்தலைவர் இன்னொருவரை கூப்பிட்டு பிடிக்க சொல்கிறார் அவர்தான் இன்றைய தமிழக முதல்வர்
அண்ணன் எடப்பாடியார்…
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தின் தற்போதைய முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக நியமிக்கப்பட்ட நிகழ்வை பலரும் அறிந்திருக்கக்கூடும். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில், 1986-ம் ஆண்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஜெயலலிதா எம்.ஜி.ஆர்-க்கு செங்கோலை அளிக்கும் பொழுது மேடையில் இருந்த ஒரு தொண்டரை எம்.ஜி.ஆர் அழைத்து செங்கோலை பிடிக்கச் சொல்லும் காட்சிகள் இடம்பெற்ற பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், எம்.ஜி.ஆர் அழைத்த தொண்டன் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என கட்சி ஆதரவாளர்கள் வைரலாக்கி வந்தனர்.
உண்மை என்ன ?
எம்.ஜி.ஆர் செங்கோலை அளிக்கும் வீடியோவில் இருப்பது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம். கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்பட்ட வீடியோவில் இருந்தது எடப்பாடி பழனிச்சாமியாக இருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஏனெனில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இதனை மறுத்து பதிவிட்டு இருந்தனர்.
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் 6 அடி உயர செங்கோலை பிடித்து இருக்கும் காட்சிகள் அதிமுக கட்சியின் கூட்டங்களில் தவறாமல் இடம்பெற்று இருக்கும். வீடியோவில் இருந்தது எடப்பாடி பழனிச்சாமியாக இருந்திருந்தால் அந்த புகைப்படங்கள் அதிமுக கட்சியின் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்அவுட்களில் முதன்மையாக இடம்பெற்று இருக்கும். அதேபோன்று, முதன்மை ஊடக செய்தியிலோ அல்லது அதிமுக கட்சியின் நியூஸ் ஜெ செய்தியில் கூட இது குறித்து செய்திகள் வெளியாகவில்லை.
இதையடுத்து எங்களின் தேடலில் வீடியோ பதிவு செய்யப்பட்டது எங்கிருந்து தொடங்கியது என ஆராய்ந்தோம், ” இனி என்றும் அம்மாவின் நினைவில் ” என்ற முகநூல் பக்கத்தில் கடந்த ஓராண்டிற்கு முன்பாக ” மிக சரியாக 32-ஆண்டுகளுக்கு முன் 12.07.1986-அன்று நடந்த வரலாற்று நிகழ்வு குறித்த பதிவு இது ” என்ற தலைப்பில் இதே வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில், ” புரட்சித்தலைவருக்கு வழங்கப்பட்ட இந்த வெள்ளி செங்கோலை தயார் செய்தவர் முசிறிப்புத்தன்தான் ” எனக் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், செங்கோலை பெற்ற மற்றொரு நபர் யார் என்பது குறித்தோ, எடப்பாடி பழனிச்சாமி பெயரோ இடம்பெறவில்லை. இந்த பக்கத்தில் வெளியான வீடியோ 6 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1986-ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அன்று மேடையில் இருந்த அதிமுக கட்சியை சேர்ந்த கே.சி.பழனிச்சாமியிடம் விகடன் தரப்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில்,
” எடப்பாடி பழனிச்சாமிக்கும், எம்.ஜி.ஆருக்கும் என்ன சம்பந்தம் ? இந்த மாநாடு நடந்தது 1986-ல். எடப்பாடி அதிமுக கட்சிக்குள் வந்தது 1988-ம் ஆண்டு. சேலம் கண்ணன் என்பவர் நடத்தி வந்த ஜெயலலிதா பேரவையில் எடப்பாடி பகுதியில் பொறுப்பாளராக இருந்து, அதற்கு பிறகு அதிமுகவிற்குள் வந்தவர். இந்த நிகழ்ச்சி நடத்த காலத்தில் அன்றைய அதிமுகவின் தென்மாவட்டத்தின் முக்கியத் தூணாக விளங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர் முத்துசாமி, நாவலர் உடன் நானும் மேடையில் இருந்தேன்.
எம்.ஜி.ஆர் உடைய பாணி என்னவென்றால், ஒரு கட்டிடத்தைத் திறந்து வைப்பதாக இருந்தால் கூட, அந்தக் கட்டிடத்தை கட்டிய கொத்தனாரை வைத்து திறக்க சொல்லுவார். அதேபோல், அன்று செங்கோலை கொடுக்கும் பொழுது மதுரை பகுதியைச் சேர்ந்த சாதாரண ஒரு தொண்டரை அழைத்தார். அதன் நான் நேரில் பார்த்தேன். அந்த நிகழ்ச்சிக்கும் எடப்பாடிக்கும் முடிச்சுப் போடாதீர்கள் ” என தெரிவித்து இருந்தார்.
That’s MR Murugumani Southarcot District Students Wong Secretary
— Devanathan Yadav T (@DevanathayadavT) September 24, 2019
அடுத்ததாக, இந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்து இருந்த ஒரு பதிவில் வின் டிவியின் (WIN TV) தேவநாதன் யாதவ் என்பவர் ” அந்த வீடியோவில் இருப்பது தெற்கு ஆற்காட்டின் அதிமுக மாணவர் அணியின் செயலாளர் முருகமணி ” என குறிப்பிட்டு இருந்தார்.
இதேபோன்று, ” இனி என்றும் அம்மாவின் நினைவில் ” என்ற முகநூல் பக்கத்தில் வெளியான பதிவில் ” மறுநாள் காலை ஊர்வலம் தமுக்கம் திடலில் இருந்து யானை மீது அமர்ந்து கழகக்கொடியை ஏந்தியவாறு அண்ணன் நெல்லை இளமதி தலைமையில் துவங்கிய ஊர்வலம், மதுரை பந்தய சாலை திடலில் முடிந்து, மாநாடு கடலூர் அண்ணன் முருகமணி தலைமையில் துவங்கியது. ஊர்வலத்தை தொடங்கிவைத்தவர் ஜெயலலிதா அவர்கள் ” எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
முடிவு :
நம்முடைய தேடலில், 1986-ம் ஆண்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா செங்கோல் உடன் இருக்கும் காட்சியில் அதனை பிடித்து இருந்த மற்றொரு நபர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளன.
எம்ஜிஆரிடம் இருந்து செங்கோலை எடப்பாடி பழனிச்சாமி வாங்கினார் என்ற செய்தியை அன்றைய அதிமுகவைச் சேர்ந்த கே.சி பழனிச்சாமி மறுத்துள்ளார். மேடையில் இருந்த தொண்டனை அழைத்து கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
முருகமணி என்பவரின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், வீடியோவில் இருந்தது முருகமணி தான் என உறுதியாக கூறமுடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பதை உறுதியாக கூற முடிகிறது.
அதிமுக ஆதரவாளர்கள் மட்டுமின்றி வலதுசாரி ஆதரவாளர்கள் கூட இந்த வதந்தியை பரப்பி உள்ளனர். கதிர் நியூஸ் சென்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது. சமூக ஊடகத்தின் வழியாக விளம்பரப்படுத்திக் கொள்ள வதந்தியை பரப்பி இருக்கக்கூடும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.