எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவு நீக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
1983- எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். ” உத்தரவு எண் : RCF 23 – 75/83 ” .
மதிப்பீடு
சுருக்கம்
1974-ல் இந்தியா இலங்கைக்கு இடையேயான ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. 1983-ல் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத் தீவை நீக்கி அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
விளக்கம்
தமிழக அரசியல் களத்தில் கச்சத் தீவு என்ற வார்த்தையை கேட்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் ” கச்சத் தீவை ” மீட்போம் என்ற வார்த்தை இடம் பெறாமல் இருக்காது. ” கச்சத் தீவை ” மீட்போம் , உரிய நடவடிக்கை எடுப்போம், மத்திய அரசிக்கு அழுத்தம் கொடுப்போம் என கூறும் கட்சியினர் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்களாக இருப்பர், மத்தியில் இவர்களின் துணையுடன் தான் ஆட்சியும் அமைந்து இருக்கும்.
மத்திய காங்கிரஸ் அரசு கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு என்ன செய்துக் கொண்டு இருந்தது என்ற கேள்வி எப்பொழுதும் நீங்காமல் இருக்கும். ஆனால், சமூக வலைத்தளத்தில் கச்சத் தீவு விவகாரம் அதிமுக கட்சியை நோக்கி திரும்பி உள்ளது.
” 1983-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். ” உத்தரவு எண் : RCF 23 – 75/83 ” என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கச்சத் தீவு பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது, அதற்கான எண்ணற்ற ஆதாரங்கள் இருந்துள்ளன. அவற்றையும் தாண்டி இலங்கையை தன் நட்பு நாடுகளின் வட்டாரத்தில் வைத்துக் கொள்ள 28.06.1974 ஆம் ஆண்டில் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
” கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் எம்ஜிஆரின் பங்காளிப்பு சிறிதளவும் இல்லை, அது முழுக்க முழுக்க கருணாநிதியின் நடவடடிக்கை. கச்சத் தீவு விவகாரத்தில் அதிமுக பலத்த எதிர்ப்பை காட்டியது. மாநில சட்டமன்றத்தில் கச்சத் தீவு விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதால், மத்திய அரசு தன்னிச்சையாக கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியது.
அதிகாரப்பூர்வமாக கச்சத் தீவை மொத்தமாக மத்திய அரசிற்கு ஒப்பந்தத்தின் படி வழங்கி விட்ட பிறகு மாநில அரசு தன் வரைபடத்தில் இருந்து நீக்குவது என்பது ஒரு சாதாரண அலுவல் நடைமுறையாகும். நிர்வாகம் அறிந்தவர்களுக்கு இது நன்றாக புரியும் ” என 2016-ல் அளித்த பேட்டியில் அரங்கநாயகம் தெரிவித்து இருந்தார்.
அரங்கநாயகம் எம்.ஜி.ஆர் அரசின் ஆட்சியில் அமைச்சரவையில் இருந்தவர். கச்சத் தீவு தொடர்பான அனைத்து கட்சிக்கு கூட்டத்திற்கு எம்.ஜி.ஆரால் அனுப்பி வைக்கப்பட்டவர்.
1974 & 1976 ஒப்பந்தங்களின் படி அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு மூலம் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதன்படி , 1983-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அன்றைய ராமநாதபுர ஆட்சியர் கச்சத் தீவை மாநில அரசின் வரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவு விட்டுள்ளார்.
கச்சத் தீவு விவகாரம் இந்திய தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், தேர்தல் களத்தில் மட்டுமே உச்சரிக்கப்படுகின்றன. மத்தியில் எந்த அரசு ஆட்சியில் அமர்ந்தாலும் கச்சத் தீவை மீட்பதில் சிறிதும் யோசிப்பதில்லை. கச்சத் தீவை அரசியலாக்குவதை தவிர்த்து மத்திய ஆட்சியில் இருக்கும் அரசு துணிந்து களமிறங்கி செயல்பட்டால் மட்டுமே கச்சத் தீவை மீட்க இயலும். இல்லையென்றால், நூற்றாண்டுகள் கடந்தாலும் கச்சத் தீவு அரசியலாக மட்டுமே பார்க்கப்படும்.