எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் எனப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு – நாதக நிர்வாகி கைது. எம்.ஜி.ஆர் சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமரியாதை செய்த, வண்ணாரப்பேட்டை நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளர் லியோனார்ட் என்பவரை கைது செய்தது காவல்துறை. குறுகிய நேரத்திலேயே அதிரடி காட்டிய சென்னை போலீஸ்
மதிப்பீடு
விளக்கம்
சென்னை வண்ணாரப்பேட்டையில் காளிங்கராயன் தெருவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலையின் மீது ஊற்றப்பட்ட பெயிண்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுத்தம் செய்து அதற்குப் பால் அபிஷேகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சீமானுக்கு வரும் வருமானத்தில் கை வச்சுட்டானே..இனி பழைய தொழிலுக்கு போகனும் போல pic.twitter.com/ucZBQV8mtN
— கருவாயன் .ℕ… (@karuvayan_2itz) August 3, 2023
இந்நிலையில் சிலையின் மீது பெயிண்ட் ஊற்றிய நபரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி எனத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு குறித்து அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை. மாறாக எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியது தொடர்பாக ஒரு நியூஸ் கார்டு பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
அந்த நியூஸ் கார்டில் ‘சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் பரபரப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பதிவில் ‘அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார்’ என்றுள்ளது. மேலும் இது குறித்து தேடியதில், பெயிண்ட் ஊற்றிய சம்பவத்தில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லியோநார்ட்(43) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளது குறித்து ‘Etv’ உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சென்னை காவல்துறையின் தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் பேசுகையில், “எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபரைப் புகார் அளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட நபர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல” எனக் கூறியுள்ளார்.
மேற்கொண்டு விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், சைதாப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆணையர் லோகநாதன் கூறியதிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய லியோநார்ட் என்பவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க : லஞ்சம் வாங்கி கைதான ஊராட்சி மன்ற தலைவர் நாம் தமிழர் கட்சி என ஊடகங்களில் வெளியான தவறான செய்தி !
இதற்கு முன்னர் நாம் தமிழர் கட்சி பற்றி பரப்பப்பட்ட போலி செய்திகள் குறித்த உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் தவறான தகவல் !
முடிவு :
நம் தேடலில், வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் எனப் பரவக் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது. தந்தி டிவி அப்படி எந்த நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை. மேலும் கைது செய்யப்பட்ட நபர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.