This article is from Oct 24, 2020

இன, மதவெறி வாசகத்திற்கு எதிராக மைக் டைசன் தொழுகை செய்ததாக வதந்தி !

பரவிய செய்தி

அமெரிக்க நாட்டின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்ட வாசகம் “நாய்கள், முஸ்லிம்கள், மற்றும் கருப்பினத்தவர்கள், உள்ளே வர அனுமதியில்லை”. இதை கேள்விப்பட்ட அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைகி டைசன் தற்போதைய உலக குத்துச்சண்டை சாம்பியன் சுவிடிஷ்படு ஜேக் மற்றும் (இமாமாக தொழவைக்கும்) உலக கிக் பாக்ஸர் சாம்பியன் *ஆமிர் அப்துல்லா * அந்த கடைக்கு சென்று ஒளு செய்து நடுக்கடையில் முசல்லா விரித்து ஜமாஅத் ஆக தொழும் காட்சி இதை கண்டு கடை நிர்வாகிகள் ஒடுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். மாஷா அல்லாஹ்.

மதிப்பீடு

விளக்கம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள ஒரு உணவகத்தின் வெளியே ” நாய்கள், முஸ்லீம்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் உள்ளே வர அனுமதியில்லை ” என்ற வாசகம் இடம்பெற்றதை அறிந்து புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் மற்றும் தற்போதைய உலக குத்துச்சண்டை வீரர் சுவிடிஷ்படு ஜேக் ஆகியோர் அந்த உணவகத்தின் முன்பாக தொழுகை நடத்தியதாக தவறான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Facebook link | Archive link 

உண்மை என்ன ? 

சமூக வலைதளப் பதிவுகளில் கூறுவது போன்று, அமெரிக்காவின் உணவகத்தில் நிறவெறி, இனவெறியை வெளிப்படுத்தும் வாசகம் இடம்பெற்று அதற்கு எதிராக மைக் டைசன் உணவகத்தின் முன்பாக தொழுகை செய்து இருந்தால் அது சர்வதேச செய்தியாக உருவெடுத்து இருக்கும். அப்படி எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. சமூக வலைதளத்தில் இதுபோன்ற புரளிக் கதைகளுக்கு பஞ்சமில்லை. மைக் டைசன் தொழுகை செய்யும் வீடியோவை வைத்து புதிய கதையை உருவாக்கி உள்ளனர்.

Twitter link | Archive link

2020 ஆகஸ்ட் மாதம் சுவீடன் நாட்டின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான Badou Jack என்பவர் மைக் டைசனுடன் இணைந்து தொழுகை செய்வதாக வைரலாகும் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில் “Praying side by side with my brothers ” என்கிற வாசகத்தை மட்டுமே பதிவிட்டு உள்ளார். சமூக வலைதளத்தில் பரவும் கதையை போல் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை.

வைரலாகும் வீடியோவில் தொழுகை செய்பவர்களுக்கு பின்னால் ” TR ” எனும் லோகோ உள்ளது. அது மைக் டைசன் உடைய நிறுவனமான ” Tyson Ranch ” உடைய லோகோவாகும். 2020 செப்டம்பர் மாதம் மைக் டைசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் அதே லோகோ இருப்பதை காணலாம். மைக் டைசனின் குத்துச்சண்டை பயிற்சி அரங்கில் தொழுகை வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

Twitter link | Archive link 

2020 ஆகஸ்ட் 23-ம் தேதி The Mayweather Channel எனும் யூடியூப் சேனலில் மைக் டைசன் உடைய பயிற்சி அரங்கில் தொழுகை செய்யும் போது வீடியோ எடுக்கும் காட்சிகள் அடங்கிய முழு வீடியோ வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தன் பயிற்சி அரங்கில் தொழுகை செய்யும் வீடியோவை வைத்து புதிய கதையுடன் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader