பால் குடிப்பதால் எலும்பு சார்ந்த ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுமா? உண்மை என்ன ?

பரவிய செய்தி

கால்சியம் சத்திற்காக பசும்பால் குடிக்க வேண்டியது அவசியமா? பசும் பால் அருந்துவதால் எலும்பு சார்ந்த ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.

FaceBook LinkArchive Link

மதிப்பீடு

விளக்கம்

கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய பசும்பால் அருந்துவது அவசியமா, பசும் பால் அருந்துவதால் எலும்பு சார்ந்த ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படும் என்ற தலைப்பில் பெண் ஒருவர் தரவுகளுடன் பேசுவது போன்ற 1:23 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில்  “இந்த டம்ளரில் உள்ள பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஆனால் இதில் விலங்கு புரதமும் (Animal Protien) அதிகமாக உள்ளன. விலங்கு புரதம் ஒரு எரிபொருள், இதில் 58% மட்டுமே செரிமானமாகக் கூடியவை. மீதமுள்ளவை 42% கழிவுகள். இது அதிக அமிலத்தன்மைக் கொண்ட கந்தகக் (Sulphur) கழிவுகளாகும்.

ஆனால் நமது உடல் காரத்தன்மைக் கொண்ட கனிமத்தையே பயன்படுத்துகிறது, இந்த கந்தக கழிவுகளை நிராகரிக்க கால்சியம் அவசியம். ஒரு டம்ளர் பால் குடித்தால் மனித உடலில் எவ்வளவு அதிகமான கால்சியம் உள்ளது தெரியுமா? பசுக்கள் அந்த கால்சியத்தை  ஏற்றுக் கொள்ள முடியும், ஏனெனில் அவைகளுக்கு 5 வயிறுகள் உள்ளன, ஆனால் நம்மிடம் ஒன்று மட்டுமே உள்ளது. இதனால் தான் உலகில் அதிகமாக பாலை பயன்படுத்துவோர் உள்ள நாடுகளில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் (எலும்புப்புரை நோய்) அதிக அளவில் ஏற்படுகிறது. யானை தனது பெரிய எலும்புகளுக்கு கால்சியத்தை எங்கிருந்து பெறுகிறது? யோசியுங்கள்.

இந்த கிரகத்தில் உள்ள மிகப்பெரிய எலும்புகளைக் கொண்டவை எல்லாம் சைவ உணவு உண்பவைகள், அவை புல்லில் இருந்தே கால்சியத்தைப் பெறுகின்றன. ஆனால் நீங்கள் புல் சாப்பிட வேண்டியதில்லை, நீங்கள் ப்ரோக்கோலி, போக் சோய் கீரை (bok choy) மற்றும் கீரைகள் அனைத்தையும் சாப்பிடலாம்.” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இதனை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்தும், பாலில் உள்ள சத்துகள் குறித்தும் முதலில் அமெரிக்காவைச் சேர்ந்த இணையதளமான ‘Milk Facts‘ என்ற பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் “பசுவின் பாலின் மொத்த கலவையில் 87.7% நீரும், 4.9% லாக்டோஸும் (கார்போஹைட்ரேட்), 3.4% கொழுப்பு சத்துகளும், 3.3% புரதமும், 0.7% தாதுக்களும் உள்ளன. ஆனால் இந்த பால் கலவை சதவீதமானது, கறவை இனங்கள் (மாடு, ஆடு, செம்மறி), மாடுகளின் இனவகை (ஹோல்ஸ்டீன், ஜெர்சி), விலங்குகளின் தீவனம் மற்றும் பாலூட்டும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவர் பேசியது போன்று பாலில் அதிக விலங்கு புரத சத்துகள் (Animal Protiens) இருப்பது பற்றி இதில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் ஆய்வு செய்ததில், Journal of Dairyscience வெளியிட்ட பால் மூலங்களில் உள்ள கால்சியம் அளவுகள் பற்றிய தரவு கிடைத்தது. அதில் “பசுவின் இனத்தைப் பொறுத்து பாலில் உள்ள கால்சியத்தின் அளவு மாறுபடும். சில நேரங்களில், ஜெர்சி (Jersey) மற்றும் குர்ன்சி (Guernsey) மாடுகளின் பாலில் பொதுவாக 130 மி.கி கால்சியம்/100 கிராம் இருக்கும் என்றும், அதே சமயம் ஹோல்ஸ்டீன்ஸ் (Holsteins) மற்றும் அயர்ஷைர்ஸ் (Ayrshires) இனங்களில் பொதுவாக 120 மி.கி கால்சியம் /100 கிராம் (அ) அதற்கும் குறைவான அளவு கால்சியம் இருக்கும்.” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Healthline.com வெளியிட்ட ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் கட்டுரையின்படி , பாலில் அதிக அளவு கால்சியம் இருப்பது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. காரணம், புரதம் செரிக்கப்படும்போது, ​​இரத்தத்தின் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யும். எனவே அமிலத்தை நடுநிலையாக்க உடல் இரத்தத்தில் இருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்ளும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இதில் அதிக அறிவியல் ஆதரங்கள் எதுவும் இல்லை.

இது தொடர்பாக, பாலில் உள்ள கால்சியம்-புரோட்டீன் விகிதம் மற்றும் ஆரோக்கியமானவர்களின் சிறுநீரில் கால்சியம் வெளியேற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் காட்டும் ஒரு ஆய்வுக் கட்டுரை நம் தேடலில் கிடைத்தது. கால்சியம்-புரோட்டீன் விகிதம் உடலில் அதிகமாகும் போது சிறுநீரில் கால்சியம் வெளியேற்றம் இருக்கும். ஆனால் கால்சியம் உட்கொள்ளல் மற்றும் சிறுநீரில் கால்சியம் இழப்பை ஈடுசெய்வதற்கான அதன் பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான துல்லியமான விகிதம் நிச்சயமற்ற ஒன்றாகவே உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சில அறிக்கைகள் மேலே குறிப்பிட்ட அறிக்கைகளுக்கு முரணாக இருந்தன. அதிக அளவு பால் உட்கொள்வது சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும், காலப்போக்கில் எலும்புகளை பலவீனமடையச்செய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தன. 

எனவே மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுகளின் உண்மைத் தன்மை குறித்து தேடியதில், ஸ்டான்போர்டில் உள்ள ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் கார்ட்னரின் கூற்றுப்படி, குறைந்த அளவு பாலை உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் அல்லது வேறு ஏதேனும் எலும்பு சார்ந்த நோய்களுக்கு வழிவகுப்பதில்லை என்று குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.

மேலும் statista.com இன் 2022 தரவுகளின்படி, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகளவில் ஆண்டுகளுக்கு அதிக அளவில் பசும்பாலை உட்கொள்ளும் முதல் மூன்று நாடுகளில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால் மேற்கண்ட நாடுகளில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தொடர்பானவர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தரவுகளின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த தரவுகளில் பால் பருகுவாதால் மட்டுமே இந்த நோய்க்கான முக்கிய காரணம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மரபியல், உடல் செயல்பாடு, உடல் எடை, புகைபிடித்தல் (புகை பிடிப்பவரின் அருகில் இருப்பது), மது அருந்துதல், ஹார்மோன் அளவுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பிற காரணிகளும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு காரணமாக உள்ளனஎனவே, அதிக பால் நுகர்வு கொண்ட இந்த நாடுகளில் அந்த ஆபத்து ஏற்படுவதாக தொடர்புப்படுத்தியிருப்பது தற்செயல் நிகழ்வே தவிர வேறு எதுவுமில்லை.

இந்த ஆய்வுகளை பற்றிய உண்மைத்தன்மைகளை அறிய மருத்துவர் பிரவீன் குமார் அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசுகையில், “இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அவர் கூறினார். பசுவின் பாலில் கால்சியம் மற்றும் கேசீன் (casein) போன்ற விலங்கு புரதங்கள் உள்ளன, ஆனால் இந்த வீடியோவில் கூறப்பட்டதைப் போல எந்த பாதிப்புகளையும் அவை ஏற்படுத்தாது. லாக்டோஸ் மற்றும் கால்சியம் ஆகியவை நமது உடலால் உறிஞ்சப்படும் தன்மையை கொண்டவை தான். மேலும் கால்சியம் சத்தை பெறுவதற்கு பால் ஒரு சிறந்த மூலமாகும், இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்றும் அவர் நமக்கு உறுதிப்படுத்தினார்.

முடிவு:

நம் தேடலில், பால் அருந்தக்கூடாது, பாலில் உள்ள கால்சியத்தால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோ மூலம் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader