பாலுக்கு ஜி.எஸ்.டி விதிப்படுவதாக அமைச்சர் நாசர் சொன்ன பொய் !

பரவிய செய்தி

ஒன்றிய அரசு பாலுக்குக் கூட ஜி.எஸ்.டி விதிக்கிறார்கள். – பால்வளத்துறை அமைச்சர் நாசர் 

மதிப்பீடு

விளக்கம்

ஆவின் பால் கொள்முதல் விலை (Procurement Price) உயர்த்தப்பட்டது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பசும் பாலுக்கு ரூ.32லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ.41லிருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆவினில் விற்கப்படும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) சில்லறை விற்பனை விலை ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். இந்த விலை உயர்வானது வாணிப நோக்கம் கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளுக்கு மட்டுமே என்று குறிப்பிட்டார்.

மேலும், சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிற பாக்கெட்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பாக்கெட்) மற்றும் மாதந்திரம் அட்டை மூலமாக நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்) வாங்குபவர்களுக்கு எந்த விலை ஏற்றமும் இல்லை எனப் பேசினார்.

வணிக பயன்பாடு கொண்ட பாலுக்கான விலை ஏற்றத்தினால் கடைகளில் விற்கப்படும் டீ மற்றும் காபி விலை ஏறும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். 

இதற்கு, மற்ற மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் Full cream பாலின் விலையைக் காட்டிலும் ஆவின் Full cream பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாகவே விற்கப்படுகிறது. ஒன்றிய அரசு பாலுக்குக் கூட ஜி.எஸ்.டி விதித்துள்ளது. வரலாற்றில் இல்லாத நிகழ்வு எனக் குறிப்பிடுகிறார். 

உண்மை என்ன ?

2017ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி ஒன்றிய பாஜக அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பினை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அமைச்சர் குறிப்பிட்டது போலப் பாலுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுவது இல்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து பாலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேடியதில், பாராளுமன்ற உறுப்பினர் தீன் குரியகோஸ் (DEAN KURIAKOSE) 2022, ஜூலை 25ம் தேதி லோக் சபையில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அதில் பிரஷ் மில்க் (Fresh milk) மற்றும் பதப்படுத்தப் பால் (pasteurised milk), பாக் செய்து விற்கப்படாத பால் பொருட்களான தயிர், லசி, மோர் மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். 

ஆனால், பேக்கிங் செய்யப்பட்ட (pre-packaged) தயிர், லசி, மோர், பன்னீர் மற்றும் UHT (Ultra High Temperature) மில்க் ஆகிய பொருட்களுக்கு 5 சதவீதமும், கன்டென்ஸ்ட் மில்க் (condensed milk), வெண்ணெய், நெய் மற்றும் ஜீஸ் (cheese) ஆகிய பொருட்களுக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

ஆவின் டிலைட் என்ற பெயரில் 90 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என UHT (Ultra High Temperature) பால் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.

முடிவு : 

நம் தேடலில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியது போலப் பாலுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படவில்லை. அதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும், பேக்கிங் செய்யப்பட்ட பால் சார்ந்த வேறு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. ஆவின் டிலைட் எனும் UHT பாலுக்கு 5% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader