பசும் பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 27.16ரூ எனத் தவறான விலையைப் பதிவிட்ட ஹெச்.ராஜா

பரவிய செய்தி

ஆவின் விற்பனை செய்யும் தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மாட்டுத் தீவனங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பசும்பால் கொள்முதல் விலை 19.8.2019ல் நிர்ணயிக்கப்பட்ட லிட்டருக்கு 27.16லிருந்து உயர்த்தப்படவில்லை.

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் மாட்டுத் தீவனங்கள் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 2019 ஆண்டிலிருந்து பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 27.16 ரூபாயில் இருந்து இதுவரையிலும் உயர்த்தப்படவில்லை என்றும், மேலும் ஆவின் தயிர், வெண்ணெய், நெய் என அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

உண்மை என்ன ?

சமீபத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பிராண்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5% ஜி.எஸ்.டி வரியுடன் ஆவின் பால் பொருட்களின் விலையும் ஏற்றப்பட்டு உள்ளது. இது விமர்சனத்தை பெற்றது.

ஆனால், பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து தேடிய போது, கடந்த அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலையைப் பற்றிய அரசாணை வெளியாகி உள்ளது. 19.8.2019ம் தேதி தமிழக பால்வளத்துறையின் தரப்பில் வெளியிட்ட அரசு ஆணையில், ‘ஒரு லிட்டர் பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 4-/(ரூபாய் நான்கு மட்டும்) உயர்த்தப்பட்டு ரூபாய் 28.00-ல் இருந்து ரூபாய் 32.00 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது ” எனக் கூறப்பட்டு உள்ளது.

அதன்பின்னர், 2021 ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலின் கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையே 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

” 2019ம் ஆண்டு கடைசியாக பசும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 ஆகவும், எருமை பால் லிட்டருக்கு ரூ6 உயர்த்தி ரூ41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. மாட்டுத் தீவனம் உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளதால் பசும் பால் ரூ42 ஆகவும், எருமை பால் ரூ.51 ஆகவும் உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் 2022 மே மாதம் கோரிக்கை விடுத்து இருந்தனர் “.

இதையடுத்து, மே 25ம் தேதி வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், ” பால் கொள்முதல் விலையை அதிகரிக்க தமிழக முதல்வரிடம் அதற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் நலன் கருதி, பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் ” எனத் தெரிவித்து இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், 2019-க்கு பிறகு தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், 19.8.2019ல் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லிட்டர் பசும்பாலின் கொள்முதல் விலை 27.16 ரூபாய் அல்ல, 32 ரூபாய். ஹெச்.ராஜா பழைய விலையை குறிப்பிட்டு உள்ளார். விரைவில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader