Fact Checkஅறிவியல்இந்தியாதமிழ்நாடு

பால் அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது என குடியரசுத் துணைத்தலைவர் பேசினாரா ?

பரவிய செய்தி

பால் அண்டத்தில் ‘ஓம்’ ஒலி – குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னை ஐஐடி வளாகத்தில் 2023 பிப்ரவரி 28ம் தேதி முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புத்தாக்க வசதி மையம் (Centre for Innovation Facility) அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கவும்,  புத்தாக்க நிறுவனம் தொடங்கவும் இந்த மையத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படும். இதனைக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்துப் பேசியுள்ளார்.

Advertisement

அவர் பேசியது குறித்து சன் நியூஸ் சேனல் வெளியிட்ட நியூஸ் கார்டில், ” நமது நாட்டின் சிறப்பு மிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள ‘ஓம்’, பால் அண்டத்தில் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது! சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதே செய்தியை குமுதம் மற்றும் வேந்தர்செய்திகள் வெளியிட்டுள்ளன.

Archive link 

Archive link 

உண்மை என்ன?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சென்னை ஐஐடி-ல் பேசிய வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம். ஐஐடி மெட்ராஸ் உடைய அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியின் முழுவீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் நாற்பத்து ஐந்து நிமிடம் கொண்ட அவ்வீடியோவில், கடைசியாக (1:35:00) மாணவர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அம்மாணவர், “உள்ளூர் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளில் உலக அளவில் இந்தியாவின் பங்கு என்ன? எனக் கேள்வி எழுப்புகிறார்.

அதற்குக் குடியரசுத் துணைத் தலைவர், “நாம் (இந்தியா) ஜனநாயகத்தின் தாய் மட்டும் கிடையாது. புதுமைகளின் தாயும் கூட. பூஜ்ஜியம் இருக்கிறது. அதனை யார் கண்டுபிடித்தது? நாம் தான் கண்டுபிடித்தோம்.

சமஸ்கிருதத்தின் வலிமையைப் பாருங்கள். ‘ஓம்’ என்ற வார்த்தை உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனமான நாசா ஒரு மொழியை மிகவும் முக்கியம் எனக் கருதுகிறார்கள். அது என்னவென்றால் சமஸ்கிருதம் தான். அதனால் தான் சொல்கிறேன், நாகரிகப்படி நாம்தான் புதுமைகளின் ஆரம்பப்புள்ளி.” என்று பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல கருத்துகள் பகிர்ந்தாலும், நாசா பற்றியோ அல்லது ஓம் என்பது பற்றியோ பேசியதாக இதைத் தவிர வேறு எந்த குறிப்பும் இல்லை.

குறிப்பாக, சன் நியூஸ் மற்றும் குமுதம் செய்திகளில் சொன்னது போல் ‘ஓம்’ என்பது பால் வெளியில் இருப்பதாக, அவர் எந்தவொரு இடத்திலும் பேசவில்லை. அவர் பேசியது குறித்து ஊடகங்கள் தவறாக நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளன.

சமஸ்கிருதம் முக்கிய மொழியென நாசா கூறியதா ?

குடியரசுத் துணைத் தலைவர் கூறியது போல, சமஸ்கிருத மொழியை நாசா முக்கியமான மொழி என எங்கேனும் கூறியுள்ளதா என்று இணையத்தில் தேடினோம். அப்படி எந்த செய்திகளும் வெளியாகவில்லை. சமஸ்கிருதம் பற்றி நாசா கருதுவதாக அவர் பேசிய தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.

இதேபோல, மிஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உள்ளிட்ட தொழில் நுட்பங்களுக்குச் சமஸ்கிருதமே சிறந்த மொழி என்று அறிஞர்கள் கருதுவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2018ல் பேசியுள்ளார்.

மேலும், சமஸ்கிருதம் கணினி நிரலாக்க (Programming) மொழியாக உள்ளதாக நாசா நம்புகிறது என 2019ம் ஆண்டு ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி இருந்தார். அப்போதே பலரும் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

முடிவு:

நம் தேடலில், ஓம் என்னும் சொல் பால் வெளியில் இருப்பதாக நாசா கண்டறிந்து உள்ளது எனக் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறவில்லை.

ஆனால், அதே நிகழ்ச்சியில் சமஸ்கிருத மொழியை முக்கியமான மொழியாக நாசா கருதுகிறது என அவர் கூறிய தகவல் உண்மையல்ல. நாசா அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை என்பதை அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button