நாட்டிலேயே அதிக மினரல் வாட்டர் ஆலைகளை கொண்டது தமிழகமா ?

பரவிய செய்தி

இந்தியாவில் அதிக மினரல் வாட்டர் ஆலைகளை கொண்ட முதல் மூன்று மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்.

மதிப்பீடு

சுருக்கம்

மீம் பதிவில் மாநில அனுமதி பெற்ற மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை மட்டுமே கூறப்பட்டுள்ளது. மத்திய அனுமதி பெற்றவையின் எண்ணிக்கையை சேர்ந்தால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனினும், தமிழகமே முதலிடத்தில் இருந்து வருகிறது.

விளக்கம்

மினரல் வாட்டர் கேன்கள் பயன்பாடு சிறிது சிறிதாய் பெரு நகரங்களில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்க அதிகரிக்க தனியார் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கைகளும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே செல்வதை நேரடியாகவே காண முடிகிறது.

Advertisement

இவ்வாறு உயரும் மினரல் வாட்டர் ஆலைகள் நிலத்தடி நீரை அதிக அளவில் எடுத்துக் கொண்டு அவற்றை சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படி தண்ணீரை விற்பனை செய்யும் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை குறித்த மீம் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருப்பதை காண நேரிட்டது.

அதில், தமிழகமே முதலிடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆம், இந்திய அளவில் மினரல் வாட்டர் ஆலைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றனர். ஜூன் 2019-ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தளத்தில் வெளியான செய்தியில் விவரங்கள் வெளியாகி உள்ளன.

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில், ” தமிழ்நாட்டில் 3,299 அனுமதி பெற்ற மினரல் வாட்டர், பேக்கேஜ்டு ட்ரிங்கிங் வாட்டர், கார்போனேடேடு பெவெரேஜ் யூனிட் மற்றும் பாட்டலிங் பிளாண்ட்ஸ் உள்ளன. இந்தியாவில் இயங்கும் மொத்த ஆலைகளில் 18 சதவீத ஆலைகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அத்தகைய ஆலைகளுக்கு தமிழகத்தில் உள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக ” கூறப்பட்டுள்ளது.

Advertisement

ஆனால், தமிழகத்தில் உள்ள 3,299 மினரல் வாட்டர் ஆலைகள் மாநில அரசின் அனுமதி பெற்றவை. தமிழகத்தில் மாநில அனுமதி பெற்ற 3,299 ஆலைகள் மற்றும் மத்திய அனுமதி பெற்ற 486 ஆலைகள் என மொத்தம் 3717 மினரல் வாட்டர் ஆலைகள் இயங்கி வருகிறது. தமிழகத்திற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 1882 மாநில அனுமதி, 1438 மத்திய அனுமதி பெற்ற ஆலைகளும்(3,320), கர்நாடகாவில் 1,699 மாநில அனுமதியும், 300 மத்திய அனுமதியும் பெற்ற(1999) ஆலைகளும் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு Packaged Drinking water Manufacturers association-ன் படி, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் மட்டும் 500 யூனிட்கள் உள்ளன. ஓர் ஆலையில் நாளொன்றுக்கு 42,000 லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இது இயங்கும் நேரத்திற்கு ஏற்ப வேறுபடும். இப்படி சென்னை பகுதிகளில் உள்ள ஆலைகளில் மட்டுமே நாளொருக்கு 21 மில்லியன் லிட்டர் நீர் மினரல் வாட்டர் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மினரல் வாட்டர் ஆலைகள் மட்டுமின்றி முன்னணி குளிர்பான பிராண்டுகளின் இரண்டு Carbonated Beverage Unit ஆனது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்குகிறது. அவை நாளொன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுப்பதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 24,650 மினரல் வாட்டர் ஆலைகள் உள்ளன. 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் தண்ணீரை பெற வேண்டும் என்றால் 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மினரல் வாட்டர் ஆலையிலும் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ஆயிரம் லிட்டர் தயாரிப்பு என நாளொன்றுக்கு ஆயிரக்காண லிட்டர் தேவைப்படுகிறது. அதற்கு பெருமளவு நிலத்தடி நீரையும், சில இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீரை பெறுகின்றனர்.

தமிழகத்தில் அனுமதி பெற்று இயங்கும் ஆலைகளின் எண்ணிக்கையே 3,299 ஆக உள்ளது. அனுமதி பெறாமல் இயங்கும் ஆலைகளின் எண்ணிக்கை இதில் அடங்குவதில்லை. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை அருகே 15-க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் ஆலைகள் அனுமதியின்றி இயங்குவதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவிலேயே மினரல் வாட்டர் ஆலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பது உண்மையே. இவற்றால் நிலத்தடி நீர் மட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மக்கள் நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து பயன்படுத்த வேண்டுமே தவிர நிலத்திற்கு கீழே இருக்கும் நீரை மொத்தமாய் உறிஞ்சுவது ஆபத்தையே விளைவிக்கும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button