அமைச்சர் எ.வ.வேலு சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவதாகப் பரவும் தவறானப் புகைப்படம் !

பரவிய செய்தி
ஏ வ வேலுவின் பரிணாம வளர்ச்சி !
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், அவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிரச்சாரம் செய்யும் போது சைக்கிள் ரிக்ஷா தள்ளிக்கொண்டு இருந்தார். அவரது வளர்ச்சியைப் பாருங்கள் எனப் புகைப்படம் ஒன்று பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
ஏ வ வேலுவின்
பரிணாம வளர்ச்சி ! pic.twitter.com/LkOKeK0W4F— லட்சுமி 💃🚩 (@Deppaa2) November 5, 2023
அதானி மற்றும் அம்பானியின்
வளர்ச்சியெல்லாம் திராவிட
வளர்ச்சியின் முன் சாதாரணம்…!?ஏ.வ.வேலுவின் பரிணாம
வளர்ச்சி…!? pic.twitter.com/PggvgfC7CJ— нαяι (@Hari46620091) November 6, 2023
உண்மை என்ன ?
அமைச்சர் எ.வ.வேலு எனப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், அப்படம் ’தி இந்து’ இணையதளத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து 2018, ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது.
கலைஞர் காலமான தினத்தன்று அவர் குறித்து படங்களுடன் அந்த தொகுப்பு வெளியிடப்பட்டது. அதில் பரவக் கூடிய படம், மே 11, 1991 அன்று சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது என்றுள்ளது.
மேற்கொண்டு எ.வ.வேலுவின் அரசியல் வாழ்க்கை குறித்துத் ஆய்வு செய்ததில் அவர் ஆரம்பக் காலத்தில் அதிமுகவில் இருந்ததும், பின்னர் திமுகவில் இணைந்ததும் அறிய முடிந்தது.
எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டுவில் உள்ள குடலூர் என்னும் கிராமத்தில் 1951, மார்ச் 15ம் தேதி பிறந்தார். பேருந்து நடத்துனராக பணியாற்றி, பின்னர் அதிமுக தொடங்கப்பட்டபோது தனது அரசியல் வாழ்க்கையையும் தொடங்கினார் என ‘விகடனில்’ அவர் பற்றி வெளியான கட்டுரையில் உள்ளது.
அவர் 1984ம் ஆண்டு அதிமுக சார்பில் தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். காலமானதைத் தொடர்ந்து ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜானகி அணி சார்பாக தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கட்சியும் ஆட்சியும் ஜெயலலிதாவிடம் சென்ற நிலையில் அதிமுகவில் இருந்து விலகி, இயக்குநர் பாக்கியராஜ் தொடங்கிய ’எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகத்தில்’ கொள்கை பரப்பு செயலாளராகத் தனது அரசியல் பணியினை தொடர்ந்துள்ளார். அக்கட்சி கலைக்கப்பட்ட நிலையில், திமுக-வில் இணைந்து 2001ம் ஆண்டு மீண்டும் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
எ.வ.வேலு குறித்து ‘பிபிசி தமிழில்’ வெளிவந்துள்ள கட்டுரையில் அவர் 2000ம் ஆண்டில் திமுக-வில் இணைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991 காலக்கட்டத்தில் எ.வ.வேலு திமுகவில் இல்லை. திமுகவில் இல்லாத ஒருவர் அதுவும் 1984ம் ஆண்டிலேயே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எப்படி 1991ம் ஆண்டு கலைஞரின் பிரச்சாரத்திற்கு ரிக்ஷா ஓட்டி இருப்பார் என்கிற கேள்வி எழுகிறது. கிடைக்கப்பட்ட ஆதாரத்தில் இருந்து பரவக் கூடிய படத்தில் இருப்பது எ.வ.வேலு இல்லை என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் எ.வ.வேலு கலைஞர் கருணாநிதியின் பிரச்சாரத்திற்குச் சைக்கிள் ரிக்ஷா ஓட்டியதாகப் பரவும் படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அப்படம் 1991, மே 11ம் தேதி சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் எ.வ.வேலு திமுக-வில் இல்லை என்பதை அறிய முடிகிறது.