கலைஞர் நினைவிடத்திற்கு சென்றவர்கள் அதிமுகவினரே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரா ?

பரவிய செய்தி
கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 27-ம் தேதி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவினர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படம் செய்திகளில் வெளியாகியது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார், ” கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல ” எனக் கூறியதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. இந்த நியூஸ் கார்டை வைத்து மீம்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
” மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் ” என ஜனவரி 27-ம் தேதி புதிய தலைமுறை செய்தியில் வெளியாகி இருக்கிறது.
புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டுகளில், ஜனவரி 27-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஜனவரி 27-ம் தேதி வெளியான நியூஸ் கார்டு(உதாரணம்) உடன் வைரலாகும் நியூஸ் கார்டை ஒப்பிட்டு காண்பித்து உள்ளோம்.
வைரலாகும் நியூஸ் கார்டில், எழுத்து வடிவம் புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்ட் எழுத்து வடிவம் போல் இல்லை, சேனலின் லோகோவும் இடம்பெறவில்லை. இது கிண்டலுக்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காவோ எடிட் செய்த நியூஸ் கார்டே.
மேலும் படிக்க : அம்மா உயிரோடு இருந்தால் கூட இவ்வளவு சிறப்பான நினைவிடம் அமைந்திருக்காது என திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா ?
முடிவு :
நம் தேடலில், கலைஞர் நினைவிடத்துக்குச் சென்றவர்கள் அதிமுகவினரே அல்ல. உண்மையான தொண்டர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது .