அமைச்சர் கே.என்.நேரு பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமரவில்லையா ?

பரவிய செய்தி
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் பங்காரு அடிகளார் முன் அண்ணன் கே என் நேரு தரையில் அமர்ந்திருந்தார் என்று வெளி வந்து கொண்டிருக்கிறது அது உண்மையல்ல என்பதற்கு சான்று… உங்க எடிட்டிங் சூப்பர்டா சங்கீஸ்.
மதிப்பீடு
விளக்கம்
திமுக அமைச்சர் கே.என்.நேரு பங்காரு அடிகளாரை சந்தித்த போது அவருக்கு முன்பாக இருக்கை இருந்தும் தரையில் அமர்ந்து இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமர்ந்த செயல் திமுக தரப்பிலேயே எதிர்ப்பை பெற்றது.
இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்றும், அவர் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து இருக்கிறார் என வேறு சில படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அமைச்சர் கே.என்.நேரு தரையில் அமர்ந்து இருக்கும் படம் போலியானது அல்ல. மேலும், அவர் ஷோபாவில் அமர்ந்து இருப்பதாக பரவும் புகைப்படமே எடிட் செய்யப்பட்டது.
அடுத்ததாக, இதை திமுக ஐ.டி.விங் பிரிவே எடிட் செய்து பரப்பியதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆகையால், இதை யார் எடிட் செய்தார்கள் எனத் தேடிய போது, எடிட் செய்யப்பட்ட வைரல் படத்தில் ராஜேஷ் பென்சில் என எழுதி இருப்பதை பார்க்க முடிந்தது.
தி இந்து நாளிதழில் பணியாற்றும் ராஜேஷ் திமுகவினரைக் குறிப்பிட்டு அவர் எடிட் செய்த படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதிலும் முதல் படத்தில் இருந்த கால், வேட்டி கரை உள்ளிட்ட தவறுகளை சரி செய்து மீண்டும் ஒரு படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இப்படத்தை நகைச்சுவைக்காக எடிட் செய்து இருப்பதாகவும், வைரலாகும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் பதிவின் கமண்ட்களில் அவரே தெரிவித்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில் , அமைச்சர் கே.என்.நேரு பங்காரு அடிகளார் முன்பு தரையில் அமரவில்லை என்றும், ஷோபாவில் அமர்ந்து இருப்பதாகவும் பரவும் தகவல் தவறானது, அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.