அமைச்சர் பொன்முடியிடம் இருந்து ரூ480 கோடி பறிமுதல் செய்ததாகப் போலி நியூஸ் கார்டை பகிர்ந்த இந்து மக்கள் கட்சி !

பரவிய செய்தி
ரூ.480 கோடி வைப்புத்தொகை பறிமுதல். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.480 கோடி வைப்புத்தொகை பறிமுதல் – அமலாக்கத்துறை தகவல் Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு கிட்டத்தட்ட 28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அவர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ல் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
எனவே இந்த சம்பவத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி தற்போது அவருக்கு தொடர்பான 9 இடங்களில் ஜூலை 17 முதல் அமலாக்கத்துறையினர் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்தது. அமலாக்கத்துறையால் அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
நம் வரிப்பணத்தை திருடிய ஓசி காசு ! pic.twitter.com/yuKVuYgcYO
— Seelan Tamilan (@SeelanTamilan1) July 18, 2023
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.480 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தொடர்பான செய்தி படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அது புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு என்பதை அறிய முடிந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் தேடுகையில் ஜூலை 17ம் தேதி அமைச்சர் பொன்முடி குறித்து வெளியிட்ட நியூஸ் கார்டு கிடைத்தது.
#BREAKING | அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம்#MinisterPonmudi | #ED | #EDRaid | #EnforcementDirectorate pic.twitter.com/jqmkp5Min1
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 17, 2023
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டில், ” ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் – அமலாக்கத்துறை தகவல் இந்தோனேஷிய நிறுவனத்திற்கு சுமார் ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்; வைப்புத்தொகை தவிர பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது ” என்றே உள்ளது.
ரூ.41.9 கோடி வைப்புத்தொகை முடக்கம் என வெளியிடப்பட்ட நியூஸ் கார்டில் ரூ.480 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக போலியாக எடிட் செய்து உள்ளனர்.
During the searches, various incriminating documents, cash amounting to Rs. 81.7 lakh, foreign currency (British pounds) equivalent to approx. Rs. 13 lakhs was seized and Fixed Deposits of Rs.41.9 Crore have been freezed.
— ED (@dir_ed) July 18, 2023
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ” ரூ81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டு இருக்கிறது ” என அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க : தமிழ்நாடு மின்துறை அதிகாரிகளிடம் ரூ.360 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகப் பரவும் பொய் தகவல் !
மேலும் படிக்க : கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம் எனத் தவறான செய்தியைப் பரப்பிய சாட்டை துரைமுருகன் !
முடிவு :
நம் தேடலில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.480 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.