புதிய கல்விக் கொள்கை: தவறாக பரவும் அமைச்சர் பொன்முடியின் பேச்சு !

பரவிய செய்தி
புதிய கல்விக் கொள்கையை பின்பற்றத் தயார் : அமைச்சர் பொன்முடி !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை பின்பற்ற தயார் எனக் கூறியதாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு சொன்ன மாநில மொழிக் கொள்கை என்ன ஆனது என பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது.
புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களைப் பின்பற்றத்தயார் என அறிவித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
என்ன மோசடித்தனம் இது? புதிய கல்விக்கொள்கையைப் புறக்கணித்துவிட்டு, முற்றிலும் மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கையைக் கொண்டுவருவோம் எனக் கூறியது என்னானது?
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) May 13, 2022
உண்மை என்ன ?
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி, மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் போது பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் படிக்க வேண்டும், எந்த மொழியை வேண்டும் என்றாலும் கற்கலாம், ஆனால் இந்தி மொழியைத் திணிக்க கூடாது என பல்வேறு விசயங்களை மேடையில் ஆளுநரை வைத்துக் கொண்டே பேசி உள்ளார்.
13வது நிமிடத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழ்நாடில் நீண்ட காலமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அண்ணா ஒரு உதாரணம் சொன்னார். ஒரு வீட்டில் பூனை போவதற்கு பெரிய ஓட்டையும், எலி போவதற்கு சின்ன ஓட்டையும் போட்டாராம். அதற்கு பூனை போகும் ஓட்டையிலேயே எலி போகாதா என எதிர் வீட்டுக்காரர் கூறினாராம். நாம் சர்வதேச மொழியான ஆங்கிலம் கற்கிறோம், அதேநேரத்தில் உள்ளூர் மொழியாக தமிழ் கற்கிறோம். நாங்கள் புதியக் கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் எங்கள் கல்விக் கொள்கையை மட்டுமே பின்பற்றுவோம்.
தமிழகத்தின் கல்விக் கொள்கையை நிறுவுவதற்காக கல்வியாளர்களை கொண்ட குழுவை தமிழக முதல்வர் நியமித்து உள்ளார். இந்த குழுவின் அடிப்டையில் தமிழ்நாடு கல்விக் கொள்கை ஏற்படுத்தப்படும். ஆகையால், கவர்னரிடம் எங்களின் உணர்வை வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு ஒன்றிய அரசிடம் எங்கள் நிலைபாட்டை விளக்க வேண்டும்.
தமிழ்நாடு மாணவர்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் படிக்க தயாராக உள்ளனர். இந்தி விருப்ப மொழிதான். அதனை கட்டாயமாக்க கூடாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மட்டுமே கட்டாய மொழியாக உள்ளது. இதுதான் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழு மூலம் செயல்படுத்தப்படும் ” எனப் பேசியுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் பொன்முடி புதியக் கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்க தயாராக இருக்கிறோம் எனக் கூறியது மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டு தவறாக பகிரப்பட்டு வருகிறது. எனினும், தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கையே செயல்படுத்தப்படும் எனப் பேசியதை பல செய்தி கார்டுகளிலும் சேர்த்து வெளியிடாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.