பிடிஆர் நிதியமைச்சர் ஆனப் பிறகு தமிழக அரசு ஒரே ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்கியதா ?

பரவிய செய்தி

தமிழ்நாடு கடன் : பிடிஆருக்கு முன் – ரூ.4,85,000 கோடி, பிடிஆருக்கு பின் – ரூ.6,54,000 கோடி. ஒரு வருடத்தில் சுமார் ₹2 லட்சம் கோடி கடன் வாங்கிய நிதியமைச்சர் ஒருவர், நிதி விவேகம் குறித்து நாட்டிற்கு உரை நிகழ்த்துகிறார்.  ஒருவர் ஆங்கிலம் பேசத் தெரிந்ததால், அவர் அறிவாளியாகிவிட மாட்டார்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மானியங்கள் மற்றும் இலவசங்கள் இந்திய கலாச்சாரத்தின் மிகப்பெரிய கோளாறாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசி இருந்தார். மேலும், அரசியல் கட்சிகளின் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அளிக்கலாமா எனும் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த சூழலில், இலவசங்கள் தொடர்பாக இந்தியா டுடே சேனலில் நடைபெற்ற விவாதத்தில்  தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், ” தமிழகத்தின் கடன் பிடிஆர் நிதியமைச்சர் ஆவதற்கு முன்பாக 4,85,000 கோடியாக இருந்தது ரூ.6,54,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் சுமார் ₹2 லட்சம் கோடி கடன் வாங்கிய நிதியமைச்சர் ” எனக் கூறி தமிழக பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ?  

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 2021 மார்ச் மாதம் அதிமுக ஆட்சியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 2021 மார்ச் 31-ம் தேதி வரை ஒட்டுமொத்த கடன் ரூ.4,85,502 கோடியில் இருந்து 2022 மார்ச் மாதம் ரூ.5,70,189 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2021-2022 நிதியாண்டில் ரூ.84,202 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பிறகு ஆட்சிக்கு வந்த ” திமுக அரசின் நிதியமைச்சர் பிடிஆர் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்ட அறிக்கையில், நிதிப்பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும் ” எனக் குறிப்பிட்டு இருந்தார். இது ஓபிஎஸ் கூறியதை விட 8,327 கோடி அதிகம்.

அதன்பின்னர், மார்ச் மாதம் தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையில், 2022-23ல் தமிழக அரசு ரூ.90,116.52 கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், 2022-23ல் அரசின் மொத்த கடன் ரூ.6,53,348 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2021 மார்ச் மாதம் வரை அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் ரூ.4,85,502 கோடி மொத்த கடன் மற்றும் 2021-22ம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை ரூ.84,202 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு திருத்திய பட்ஜெட்டை வெளியிட்டது. தற்போது 2022-23ல் பட்ஜெட்டில் ரூ90,116.52 கோடி கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், கடன் நிலுவைத் தொகை ரூ.6,53,348 கோடியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மற்றும் உயரும் கடன் தொகை ரூ.5,70,189கோடி(2021-22) என தெரிவித்து விட்டனர். இதை பிடிஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் வெளியிட்டு இருக்கிறார். 2022-23ம் ஆண்டில் திமுக அரசு ரூ90,116.52 கோடி வாங்க உள்ளது. இதன்படி பார்க்கையில், நிதியமைச்சர் பிடிஆர் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.2 லட்சம் கோடி கடன் பெறவில்லை.
ஒன்றிய அரசின் கடன் :
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2013-14 பட்ஜெட் படி, ரூ.40,22,285.01 கோடியாக இருந்த ஒன்றிய அரசின் மொத்த பொதுக் கடன் ( மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடன்கள் சேர்க்காமல்) 2021-22ல் பாஜக ஆட்சியில் ரூ.83,87,778.14 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பொதுக் கடன் ரூ.43 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
முடிவு : 
நம் தேடலில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் ஒரே ஆண்டில் 2 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாக கூறுவது தவறான தகவல்  என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader