போதையில் காவலர்களை மிரட்டுபவர் அமைச்சர் சி.வி.சண்முகம் மகனா ?

பரவிய செய்தி
தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் மகன் குடிபோதையில் காவல்துறை அதிகாரிகளை பொரட்டி எடுக்கிறான். வாழ்க தமிழக அரசு… வளர்க காவல்துறை.
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் சி.வி,சண்முகம் அவர்களின் மகன் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதாகவும், ஆபாசமாக திட்டுவதாகவும் கூறி ஒரு வீடியோ பதிவு நாட்டு-நாய் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
சென்னையில் இ.சி.ஆர் நீலாங்கரை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிவேகமாய் தாறுமாறாய் ஓடிய ” ஹூண்டாய் வெர்னா ” ஒன்று சாலையோரத்தில் நின்ற ஆட்டோ மற்றும் இளநீர் கடையின் மீது மோதி நின்றது.
காரை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்துள்ளார். விபத்தை விசாரிக்க சென்ற நீலாங்கரை காவல்துறை அதிகாரிகளை அந்த நபர் ஆபாசமாக திட்டியதோடு, அடிக்கவும் பாய்ந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, அவரை காவலர்கள் அழைத்து சென்றனர்.
விசாரணையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தகராறு செய்தவரின் பெயர் நவீன்(30) என்றும், பழம் ஏற்றுமதி தொழில் செய்பவர் என்றும் தெரிய வந்துள்ளது. பின்னர் அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் நவீனை கைது செய்துள்ளார்கள். அவரின் ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்ய ஆர்.டி.ஓ-க்கு பரிந்துரையும் செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் ஷெசாங்சாய் ஐ.பி.எஸ்அவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் குடிபோதையில் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதாக பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் “.
முடிவு :
போதையில் காவல்துறை அதிகாரியிடம் தகராறு செய்த நவீன் என்ற நபரை காவல்துறை கைது செய்து உள்ளனர். ஆனால், தகராறு செய்தது அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் என தவறாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.