அம்மா உயிரோடு இருந்தால் கூட இவ்வளவு சிறப்பான நினைவிடம் அமைந்திருக்காது என திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா ?

பரவிய செய்தி
அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அம்மாவின் கிருபை நிச்சயம் கிடைக்கும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மதிப்பீடு
விளக்கம்
ஜனவரி 27-ம் தேதி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா நடைபெற்ற பிறகு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையான கருத்தைக் கூறியதாக நியூஸ் 7 செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா நடைபெற்றது ஜனவரி 27,2021. ஆனால், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் இடம்பெற்று இருக்கும் தேதி ஜனவரி 27, 2020 என கடந்த ஆண்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியூஸ் கார்டில் இருக்கும் செய்தியின் எழுத்துக்கள் எடிட் செய்யப்பட்டவை என நன்றாகத் தெரிகிறது.
நியூஸ் 7 தமிழ் செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், சமீபத்தில் இதுபோன்ற நியூஸ் கார்டுகளை வெளியிடவில்லை என்பதையும், கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டில் போலியாக எடிட் செய்து உள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது.
சமீபத்தில் எடப்பாடி ஆட்சி குறித்து சர்ச்சையாக கருத்தை பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பல்வேறு சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஆகையால், அவர் ஜெயலலிதா நினைவிடம் குறித்து இப்படி பேசியதாக போலியான நியூஸ் கார்டை உருவாக்கி சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த பக்கங்களில் பரப்பி வருகிறார்கள்.