அதிமுக ஜெயக்குமாரை மெயின் ரோடு என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக திமுகவினர் பரப்பும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
ECR ரோட்டுக்கு பெயர் மாத்தினா மெயின் ரோட்டுக்கு ஏன் கோபம் வருது ? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி
மதிப்பீடு
விளக்கம்
2022 மே 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்குகடற்கரை சாலைக்கு(ECR) முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை எனப் பெயர் சூட்டப்படுவதாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. எனினும், காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். இந்தியா முழுவதும் பிரசித்திப்பெற்ற சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். விரைவில் “தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்” என்று கிண்டலடித்திருந்தார்.”
இதற்கு திமுக அமைச்சர் எ.வ.வேலு, ” ECR ரோட்டுக்கு பெயர் மாத்தினா மெயின் ரோட்டுக்கு ஏன் கோபம் வருது ? ” என விமர்சித்ததாக மாலை முரசு நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2022ம் ஆண்டில் இருந்து பரப்பப்படும் நியூஸ் கார்டு தொடர்பாக மாலை முரசு சேனலின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், 2022 மே 04-ம் தேதி பரப்பப்படும் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் பதிலடி..!#ExMinister #Jayakumar #EVVelu #NewsUpdate #Karunanidhi #Malaimurasu pic.twitter.com/1thWIKoK50
— Malaimurasu TV (@MalaimurasuTv) May 4, 2022
ஆனால், அதில் “ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் பதிலடி.. கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி சாலை பெயர் சூட்டுவதால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ வேலு பதிலடி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2022 மே 03ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் எ.வ.வேலுவிடம், ஈ.சி.ஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் சாலை எனப் பெயர் மாற்றம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எ.வ.வேலு, “நான் அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. மக்கள் யாரும் குழம்ப மாட்டார்கள். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலை மட்டும்தான் கலைஞரின் திருப்பெயரில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சாலைக்கு கிழக்கு கடற்கரைச்சாலை என்று பெயர் வைத்ததே கலைஞர்தான். அது தொன்றுதொட்டு இருந்த பெயர் அல்ல. கல்வழிச்சாலையாக இருந்ததை செப்பனிட்டு அந்த சாலைக்கு பெயர் வைத்ததே அவர்தான்.
நெடுஞ்சாலைத்துறை என்று ஒரு துறையை உருவாக்கியதும் அவர்தான். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்தான் முதல்வர் அவர்களால் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலைக்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வித் தகுதிப் பற்றி பாஜகவினரும், தினமலரும் பரப்பியத் தவறான தகவல் !
மேலும் படிக்க : 8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக கூறவே இல்லையா ? பொய் சொல்லலாமா அமைச்சரே !
இதற்கு முன்பாக அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான செய்திகள் குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ECR ரோட்டுக்கு பெயர் மாத்தினா மெயின் ரோட்டுக்கு ஏன் கோபம் வருது? என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.