This article is from Oct 08, 2020

தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் 200 கோடி சொகுசு பங்களாவா ?

பரவிய செய்தி

எங்கிருந்து வந்தது இவ்வளவு வசதி..? வருமான வரிச்சோதனை அலுவலர்களுக்கு முகவரி தெரியாதா..?

Facebook link | Archive link 1 | Archive link 2

மதிப்பீடு

விளக்கம்

அக்டோபர் 6-ம் தேதி Daily AMMK எனும் முகநூல் பக்கத்தில், ” எங்கிருந்து வந்தது இவ்வளவு வசதி..? வருமான வரிச்சோதனை அலுவலர்களுக்கு முகவரி தெரியாதா..?” என்கிற நிலைத்தகவல் உடன் வெளியான பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் சொகுசு பங்களாவை வேக வேகமாக காண்பித்து இருக்கும் 1 நிமிட வீடியோ ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டும் வருகிறது. தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணி 200 கோடி மதிப்பில் கட்டிய வீடு என இவ்வீடியோவில் புகைப்படத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ? 

கடந்த மே மாதம் மலையாளத் திரைப்பட நடிகர் மம்மூட்டி எர்ணாகுளத்தில் கட்டிய சொகுசு பங்களா எனக் கூறி இதே சொகுசு பங்களாவின் வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர்.

Twitter link | Archive link

எனினும், வீடியோவில் காண்பிக்கப்பட்டு இருக்கும் சொகுசு பங்களா நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமானதும் அல்ல. 2020 மே 23-ம் தேதி மலையாளி மீடியா எனும் யூட்யூப் சேனலில் ” Mr Reji’s Luxury Home at kuruppampady @ Perumbavoor | Cenimatic Video ” எனும் தலைப்பில் சினிமா பாணியில் எடுக்கப்பட்ட அதே வீடியோ வெளியாகி இருக்கிறது.

வீடியோப் பதிவின் நிலைத்தகவலில், ” 10,000 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் இந்த வீடு பெரும்பவூரின் குருப்பம்பாடி பகுதியில் அமைந்து உள்ளதாகவும், உரிமையாளரின் பெயர் ரெஜி ” எனக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

2020 மே 26-ம் தேதி ஆங்கில மனோரமா இணையதளம் பங்களாவின் உரிமையாளர் ரெஜியை பேட்டி எடுத்து வெளியிட்டு உள்ளனர். அந்த பேட்டியில், ” குருப்பம்பாடியில் உள்ள எனது வீட்டின் வீடியோ மம்மூட்டியின் வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்த வீட்டை செபாஸ்டியன் ஜோஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் வீட்டின் திருப்பு விழாவைக் கொண்டாடினோம். எனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எனது வீட்டின் வீடியோக்களை எடுத்தோம். அவர்கள் எங்களுக்கு படம்பிடித்து கொடுத்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் அதை மம்மூட்டியின் வீடு என டிக்டாக்கில் வெளியிட்டார் ” எனக் கூறியதாக வெளியாகி உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவில் குருப்பம்பாடியில் அமைந்துள்ள ரெஜி என்பவரின் வீட்டின் வீடியோவை தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீடு என பரப்பி வருகின்றனர், இதற்கு முன்பாக அதே வீட்டை நடிகர் மம்மூட்டியின் வீடு என்றும் வதந்தியை பரப்பி இருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader