அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய அரிசி பையில் “நாளைய முதல்வர்” வாசகமா?| ஃபோட்டோஷாப் வேலை .

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகம் தினந்தோறும் ஊடங்களில் காட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, அமைச்சரின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. ஒருகட்டத்தில் நாளைய முதல்வர் என்ற வாசகத்துடன் அவர் தொடர்பான பதிவுகள் வெளியாகின.
பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வந்தார். இதற்கு காரணம், முதல்வர் பழனிச்சாமிக்கும், அமைச்சருக்கும் ஏற்பட்ட மோதல் என விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தன் தொகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களாக அரசி மற்றும் கோதுமை வழங்கும் பணியில் இறங்கினார். அப்படி வழங்கப்பட்ட அரிசி பைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் புகைப்படத்துடன் தன்னுடைய புகைப்படத்தையும் அச்சிட்டு இருந்தார். தன் தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் வீடியோக்களை அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து இருந்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய நிவாரண பொருட்களின் பைகளில் அவரின் புகைப்படத்திற்கு கீழே ” நாளைய முதல்வர் ” என்ற வாசகம் இடம்பெற்று உள்ளதாக வட்டமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின.
#விராலிமலை தொகுதியில் ஒரு #லட்சம் குடும்பங்கள் என அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமைச்சர் @Vijayabaskarofl அவர்களின் நிவாரண பொருட்கள். அரிசி மற்றும் கோதுமை. #CVB #TN_Together_AgainstCorona #coronavirus pic.twitter.com/qF2MccKqej
— Rajesh ADMK 🌱 (@RajeshWhite_) May 2, 2020
ஆனால், அமைச்சர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நேரடியாக மக்களுக்கு கொடுத்த அரிசி பைகளில் ” நாளைய முதல்வர் ” என்ற வாசகம் இடம்பெறவில்லை. அமைச்சருக்கு எதிரான யாரோ அப்பைகளில் ” நாளைய முதல்வர் ” என்ற வாசகத்தை அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம்முடைய தேடலில், அமைச்சர் விஜயபாஸ்கர் தன் தொகுதி மக்களுக்கு வழங்கிய நிவாரண பொருட்களில் “நாளைய முதல்வர்” என்ற வாசகம் இடம்பெற்றதாக வைரலாகும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.