சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை மோடி அரசு கலைக்க உள்ளதா ?

பரவிய செய்தி

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை மோடி அரசு நீக்க உள்ளது. ஆனால், நலத் திட்டங்கள் தொடரும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் தேவையில்லை.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே சாமி என்பவர் 2022 அக்டோபர் 3ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை நீக்க உள்ளது. ஆனால் அவர்களுக்கான நலத் திட்டங்கள் தொடரும் என்றும், ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் தேவையில்லை ” எனக் கூறியுள்ளார். மேலும் இதனை நல்ல செய்தி வர இருக்கிறது எனக் குறிப்பிட்டு உள்ளார். 

இதற்கு முன்பாக, அக்டோபர் 3ம் தேதி சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை ஒன்றிய அரசு நீக்கிவிட்டு, அதனை சமூக நீதி அமைச்சகத்துடன் இணைக்க வாய்ப்பு உள்ளது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக “ Modi govt likely to ‘scrap’ minority affairs ministry ” என்ற தலைப்பில்  டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை வைத்து வலதுசாரி ஆதரவு இணையதளமான ஸ்வராஜ் போன்றவையும் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன ?

சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. 

அதன்படி, ஒன்றிய அரசால் ஆறு மதத்தினரைச் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமணர் ஆகிய மதத்தினர் உள்ளனர். அவர்களுக்கான பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நலத் திட்டங்களைச் சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

” இத்துறையினை பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு நீக்கவுள்ளது. மேலும் சிறுபான்மையினர் துறையினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் சேர்க்கப் போவதாகவும், சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களைத் தொடர்ந்து சமூக நீதித் துறையின் மூலம் வழங்க உள்ளதாகவும் ” வெளியான செய்தி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களோ, அறிக்கைகளோ ஒன்றிய அரசு தரப்பில் வெளியாகவில்லை.

Twitter link 

மேலும் பரவக்கூடிய இந்த செய்தி குறித்து PIB (Press Information Bureau) தனது டிவிட்டர் பக்கத்தில், டெக்கான் ஹெரால்டு வெளியிட்ட செய்தி பொய்யானது. அப்படி எந்த பரிந்துரையும் வரவில்லை எனப் பதிவிட்டு உள்ளது. 

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி குஜராத்தில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில், ” சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை கலைக்க வேண்டும் ” எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், மோடி அரசு சிறுபான்மையினர் நல அமைச்சகத்தினை நீக்கிவிட்டு, அதனை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் சேர்க்கப்போவதாகப் பரவும் செய்தி உண்மையல்ல என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader