குஷ்புவிடம் பாஜகவினர் அடிவாங்கியதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு அக்டோபர் 12-ம் தேதி டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து, குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர் என 12 நொடிகள் கொண்ட இவ்வீடியோ முகநூல் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கூட்டத்தில் குஷ்புவிடம் தவறாக நடந்து கொண்ட நபரை குஷ்பு அடித்தது குறித்து தேடிப் பார்க்கையில், பெங்களூர் கூட்டத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரை அடித்த காங்கிரஸ் தலைவர் குஷ்பு எனும் தலைப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி இந்தியா டுடே உள்ளிட்டவையில் புகைப்படம் மற்றும் வீடியோ உடன் செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பெங்களூர் மத்திய மக்களவை தொகுதி வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்-ஐ ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் வீட்டிற்கு அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி இருக்கும் போது குஷ்புவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நபரை அறைந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்கள், செய்திகளில் வெளியாகி உள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி சினி உலகம் எனும் யூட்யூப் சேனலில் வெளியான, கூட்டத்தில் தவறாக நடக்க முயன்ற நபரை குஷ்பு அடிக்கும் வீடியோவை எடுத்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக பெங்களூரில் பிரச்சாரத்திற்கு சென்ற குஷ்புவிடம் காங்கிரஸ் தொண்டர் கூட்டத்தில் இருந்த நபர் தவறாக நடந்து கொள்ள முயன்று அடிவாங்கிய வீடியோ காட்சியை சமீபத்தில் பாஜகவினர் அடிவாங்கியதாக தவறாக பரப்பி வருகிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.