உலகச் சாம்பியனை மிசோரத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் வென்றாரா ?

பரவிய செய்தி
வரலாறு உருவாக்கப்பட்டது. 22 வயதான மிசோரம் இளைஞர் உலகின் சிறந்த குத்துச் சண்டை வீரரை வீழ்த்தி உள்ளார். ஆனால் என்னவென்றால் இது கிரிக்கெட் அல்ல. வெகு சிலரே அறிந்து உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் நுட்லை லால்பியாக்கிமா ஒலிம்பிக் சாம்பியனை கடந்த ஆண்டு கால் இறுதி போட்டியில் வீழ்த்தி உள்ளார்.
விளக்கம்
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் குத்துச்சண்டை வீரர் நம்பர் ஒன் பாக்ஸரை வீழ்த்தி உள்ளதாக பாராட்டும் ஆங்கில மீம்ஸ் ஆனது முகநூலில் பரவி வருவதை காண முடிந்தது. யூடர்ன் ஃபாலோயர்களும் அதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, மிசோரம் இளம் குத்துச்சண்டை வீரர் குறித்து தேடிய பொழுது 2018 ஜூன் மாதம் வெளியான செய்திகள் கிடைத்தது. மிசோரம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து வந்த 22 வயதான நுட்லை லால்பியாக்கிமா (Nutlai Lalbiakkima) என்ற குத்துச்சண்டை வீரர் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில் வேர்ல்ட் நம்பர் ஒன் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் நாட்டின் வீரர் Hasanboy Dusmatov-வை வீழ்த்தி இருந்தார்.
கால் இறுதிப் போட்டியில் Dusmatov-வை 4-1 என்ற கணக்கில் (lightweight-49kg) வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் என செய்திகளில் கூறப்பட்டுள்ளது. உலகச் சாம்பியனை வெற்றி கொண்டது உலக அளவில் கவனத்தைச் ஈர்த்து உள்ளது.
வீரர் லால்பியாக்கிமா ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தாயார் உள்ளூர் சந்தையில் மீன்களை விற்று குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். அவரின் தந்தை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டனர். 2009-ல் Pro-boxing tournament மூலம் தன் குத்துச்சண்டையை துவங்கியுள்ளார்.
2011-ல் மிசோரம் பிராந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் தேர்வாகி இருந்தார். 2017-ல் குத்துச்சண்டையில் தேசிய அளவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு பட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில் இணைந்தார்.
பல விளையாட்டுகளில் திறன் மிக்கவர்கள் கிராமங்களில் இருந்து வெளி வருகிறார்கள் என்பதற்கு லால்பியாக்கிமா ஓர் நல் உதாரணம்.