பங்காரு அடிகளார் காலுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவியதாகப் பாஜக, அதிமுகவினர் பரப்பும் போலியான புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலில் மலர் தூவி வணங்கியதாகப் புகைப்படம் ஒன்றினை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதாமணி மற்றும் அதிமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். பரவக் கூடிய அப்படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் உள்ளார்.
பங்காரு அடிகளார் காலில் பர்பி தேடியபோது.. https://t.co/uXSqqRA7Op pic.twitter.com/IOzxYW6YYn
— Dharma (@Dharmaselva11) June 2, 2023
உண்மை என்ன ?
பங்காரு அடிகளார் காலில் ஸ்டாலின் மலர் தூவியதாகப் பரவும் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் இணையத்தில் தேடினோம். ஸ்டாலின் மலர் தூவும் புகைப்படம் ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் 2019ம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி பதிவிட்டுள்ளார். ஆனால், அது பங்காரு அடிகளாரின் பாதங்களுக்கு கிடையாது.
ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக 2019ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மே 1ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
உலகெங்கிலும் வாழ்கின்ற உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள்.
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ எப்போதும் தொழிலாளர்களின் தோளோடு தோள் நிற்கும் தி.மு.கழகத்தின் சார்பில், தொழிலாளர்களின் வாழ்வில் மகிழ்ச்சி தவழ்ந்திட வாழ்த்துகிறேன்!#MayDay pic.twitter.com/rppWuqIBXo
— M.K.Stalin (@mkstalin) May 1, 2019
அந்நிகழ்வின் போது சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தினமணி, கலைஞர் செய்திகள் போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
மே தின நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவும் புகைப்படத்தினை ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவருக்கு அருகில் கனிமொழி இருப்பதை காண முடிகிறது.
அடுத்ததாகப் பங்காரு அடிகளாரின் படம் குறித்துத் தேடியதில், அது ஒரு யூடியூப் thumbnail-ல் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. பங்காரு அடிகளாரின் கால்களுக்கு இரண்டு பெண்கள் மலர் வைப்பது போன்று அப்படத்தில் உள்ளது. அந்த காணொளியிலும் இதனைக் காணலாம்.
பங்காரு அடிகளாரின் காலுக்கு ஸ்டாலின் மலர் தூவியதாகப் பரவும் படத்துடன், இந்த thumbnail-ஐயும் ஒப்பிட்டுப் பார்த்ததில்; இரண்டு படங்களும் ஒன்றாக வைத்து எடிட் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலே உள்ள படத்தின் மூலம் போலியாக எடிட் செய்திருப்பதைக் காணலாம்.
மேலும் படிக்க : ஐபிஎல் போட்டியில் ‘2 Years of Worst திராவிட மாடல்’ என்ற பதாகையை காண்பித்ததாகப் பரவும் எடிட் செய்த படம் !
இதேபோல், போட்டோஷாப் மூலம் போலியாக எடிட் செய்து பரப்பப்பட்ட படங்கள் குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், பங்காரு அடிகளார் கால்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவியதாகப் பரவும் புகைப்படம் போலியானது. 2019ல் மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவியதைத் எடிட் செய்து போலியான படத்தைப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.