முதல்வர் ஸ்டாலின் சிப்பாயை நகர்த்தாமல் இரண்டு மந்திரிகளை வெட்டியதாக பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
இந்தியாவுலயே ஏன் வோர்ல்டுலயே சிப்பாய்களே நகராம ரெண்டு மந்திரிகளை வெட்டுன ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம கரகாட்ட கோஷ்டிதான்
மதிப்பீடு
விளக்கம்
இன்று முதல் தமிழ்நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். செஸ் போட்டிக்கான பணிகள் தமிழக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், செஸ் விளையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தவொரு சிப்பாயைக் கூட நகர்த்தாமல் இரண்டு மந்திரிகளை வெட்டி வெளியே வைத்து உள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
” ஜூலை 27-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியில் கலந்துகொள்ளும் பன்னாட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்க மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் இன்று ஆய்வு செய்தோம் ” என ஸ்டாலின் செஸ் விளையாடும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
உலகு போற்றும் தமிழர் பண்பாட்டின் அடையாளமான விருந்தோம்பலை #ChessOlympiad2022 கலந்துகொள்ளும் பன்னாட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்க மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாண்புமிகு முதல்வர்@mkstalin அவர்களுடன் இன்று ஆய்வு செய்தோம்.@katpadidmk @evvelu @thamoanbarasan @SMeyyanathan pic.twitter.com/yYaeJPmHf1
— Udhay (@Udhaystalin) July 27, 2022
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் செஸ் ஆட்டத்திற்கு வெளியே இருக்கும் காய்களை பார்க்கையில், அது மந்திரிகள் அல்ல, இரண்டு ராணிகள். மேலும், இரண்டு பக்கத்திலும் கருப்பு மற்றும் வெள்ளை நிற மந்திரிகள் முழுமையாக இருப்பதை காணலாம்.
டாடா ஸ்டீல் செஸ் இந்தியா 2018-ல் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பிரக்ஞானந்தா இருவருக்கும் இடையிலான போட்டியில் கூட கூடுதலாக இரண்டு ராணிகள் கொடுக்கப்பட்டு இருப்பதை காணலாம். இப்படி பல்வேறு செஸ் போட்டிகளிலும் இரண்டு கூடுதல் ராணிகள் வைக்கப்பட்டு உள்ளன.
” செஸ் ஆட்டத்தில் கூடுதலாக இரண்டு ராணிகள் இடம்பெறுவது உண்டு. ஆட்டத்தில் சிப்பாயை எதிராளியின் பக்கத்தில் உள்ள கடைசி வரிசை வரை நகர்த்தி செல்லும் போது சிப்பாயை ராணியாக மாற்றிக் கொள்ளும் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுகிறது ” என simplifychess எனும் இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், முதல்வர் ஸ்டாலின் செஸ் விளையாடிய போது சிப்பாயை நகர்த்தாமல் இரண்டு மந்திரிகளை வெட்டி வெளியே வைத்து இருப்பதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அது மந்திரிகள் அல்ல, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வைக்கப்பட்டு உள்ள கூடுதலாக இரண்டு ராணிகள். அதை பயன்படுத்தும் விதியும் உள்ளது என அறிய முடிகிறது.