ஸ்டாலினின் எதிரி சீமான் என ஆந்திரா அமைச்சர் ரோஜா கூறியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

பரவிய செய்தி
தெலுங்கர் தேசமான ஆந்திரா’வின் துணை முதல்வருக்கு கூட தெரிகிறது தமிழர் மண்ணில் மெதுமெதுவாக வளரும் வலுவான தமிழ் சக்தி யார் என
மதிப்பீடு
விளக்கம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ரோஜா ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பெரிய எதிரி இருக்கிறார். அவரை ஜெயிச்சால்தால் ஸ்டாலின் முழுமையடைவார் எனச் சீமானைப் பற்றிக் குறிப்பிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஸ்டாலின் எதிரி சீமான் 💥 👇🏽
BGM 🔥 pic.twitter.com/oWXiFKWQRl— வைநாவி சுகிர்தன் ✺ (@YnavSukirthan) July 4, 2023
அப்பதிவில், ‘தெலுங்கர் தேசமான ஆந்திரா’வின் துணை முதல்வருக்கு கூட தெரிகிறது தமிழர் மண்ணில் மெதுமெதுவாக வளரும் வலுவான தமிழ் சக்தி யார் என’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
ரோஜா பேசியது தொடர்பான முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடியதில், அவர் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிப்பிடவில்லை என்பதும், கலைஞரின் பெயரையே குறிப்பிட்டுள்ளார் என்பதும் அறிய முடிந்தது.
கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார்.
அவரது உரை ‘நக்கீரன்’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிமிடம் உள்ள அந்த வீடியோவில் 6வது நிமிடத்தில் பரவக் கூடிய வீடியோ பகுதி உள்ளது. அதில், “ஸ்டாலின் சார் எதிரில் பெரிய டாஸ்க் இருப்பதாக நான் நினைக்கிறேன். நீங்கள் எல்லாம் நினைத்தபடி அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால், அவருக்கு எதிரே பெரிய எதிரி இருக்காங்க. அவரை ஜெயித்தால் தான் அவர் (ஸ்டாலின்) முழுமை ஆனது போல்” எனக் கூறிவிட்டு அந்த எதிரி யார் எனத் தெரியுமா என அங்குள்ள பார்வையாளர்களிடம் கேட்கிறார்.
அங்குள்ள கூட்டத்தினர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம் எனப் பலரைக் கூறுகின்றனர். அவர்கள் யாரும் இல்லையெனக் கூறிய ரோஜா, “அவர் யார் தெரியுமா? கலைஞர் கருணாநிதி அவர்கள். ஏன் என்றால் அவர் தமிழ்நாட்டிற்கு நிறையச் செய்துள்ளார். நிறைய நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அவற்றை எல்லாம் மீறிச் செய்தால்தான் சக்சஸ் ஆக முடியும்” எனக் கூறியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் ரோஜா பேசியது குறித்து ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட செய்தியிலும் இதே தகவலைக் காண முடிகிறது. அவர் பேசியதில் எந்த ஒரு இடத்திலும் சீமான் பற்றிக் குறிப்பிடவே இல்லை. ரோஜா பேசியதில் ஒரு பகுதியை மட்டும் எடிட் செய்து சீமான் வீடியோ இருப்பது போல மாற்றி, அவர் சீமானைத்தான் ஸ்டாலினின் எதிரி எனப் பேசியதாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
கலைஞர் தமிழ்நாட்டிற்குச் செய்த நலத்திட்டங்களை விட ஸ்டாலின் அதிகமாகச் செய்ய வேண்டும். எனவே கலைஞர்தான் ஸ்டாலினின் எதிரி என ரோஜா பேசியுள்ளார் என்பதை அவரது முழு வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பிராந்தியை எப்படி குடிப்பது என பயிற்சி அளிப்பதாகத் தவறாகப் பரவும் 2012ம் ஆண்டு செய்தி !
இதற்கு முன்னர் நாம் தமிழர் கட்சியினர் பரப்பிய போலி செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
முடிவு :
நம் தேடலில், மு.க.ஸ்டாலினின் பெரிய எதிரி சீமான் என ஆந்திரா அமைச்சர் ரோஜா பேசியதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. ஸ்டாலினின் எதிரி கலைஞர் கருணாநிதி என்றுதான் ரோஜா கூறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.