பிரதமர் மோடி பேட்மிண்டன் ஆட திணறியதாகப் பரப்பப்படும் ஹரியானா முதல்வரின் வீடியோ

பரவிய செய்தி
ஏன் ஜீ இதெல்லாம் நமக்கு தேவையா எதுக்கு இப்படி வந்து அசிங்க படுற ஐயோ முடியல.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக பேட்மிண்டன் விளையாடுகிறார், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளையாட தெரியவில்லை. இது பிரதமருக்குத் தேவையா எனக் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை திமுக ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
ஏன் ஜீ இதெல்லாம் நமக்கு தேவையா எதுக்கு இப்படி வந்து அசிங்க படுற ஐயோ முடியல 🤣🤣🤣🤣 pic.twitter.com/hO8EuSYvS2
— தமிழன் குணா (@gunapersonnel) March 31, 2023
உண்மை என்ன ?
பிரதமர் மோடி பேட்மிண்டன் விளையாடும் வீடியோ எனப் பரப்பப்படும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். ‘Haryana Tak’ எனும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த கீழ்காணும் வீடியோ கிடைத்தது.
2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பதிவிடப்பட்டிருந்த அந்த வீடியோவின் தலைப்பில் ‘CM Manoharlal Khattar Badminton’ என்றுள்ளது. மேலும் அவ்வீடியோவில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேட்மிண்டன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் செய்யப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளது.
அந்நிகழ்ச்சி 2022, ஜனவரி 2ம் தேதி நடைபெற்றது என்பதை அவ்வீடியோவில் (59 வினாடி) உள்ள பேனர் ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருடைய டிவிட்டர் பக்கத்தில் தேடினோம்.
हरियाणवियां की रग-रग मैं बसै सै खेल!
आज मैंने भी पंचकूला में ऑल इंडिया जूनियर रैंकिंग बैडमिंटन प्रतियोगिता के शुभारंभ के दौरान बैडमिंटन कोर्ट में हाथ आजमाए। pic.twitter.com/I8kQoiZb0f
— Manohar Lal (@mlkhattar) January 2, 2022
அன்றைய தேதியில் அவரது டிவிட்டர் பக்கத்தில் அவர் பேட்மிண்டன் விளையாடும் 9 வினாடி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், விளையாட்டு என்பது ஹரியானா மக்களின் ஒவ்வொருவரது நரம்புகளிலும் உள்ளது. இன்று பஞ்ச்குலா பகுதியில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி தொடக்க விழாவின் போது எனது முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
खट्टर साहब, घबराना नही है… pic.twitter.com/ZNfifx7mHd
— Srinivas BV (@srinivasiyc) January 2, 2022
அந்நிகழ்வில் அவர் விளையாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஸ்ரீநிவாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பதற வேண்டாம் கட்டார் அவர்களே’ எனக் கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் இருப்பது பிரதமர் மோடி இல்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : பிரதமர் மோடியின் கிரிக்கெட் திறமை எனப் பரப்பப்படும் யுவராஜ் சிங் தந்தையின் வீடியோ !
இதேபோல் பிரதமர் மோடி கிரிக்கெட் விளையாடும் வீடியோ என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி குறித்த உண்மைத் தன்மையினை ‘யூடர்ன்’ கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி பேட்மிண்டன் விளையாடத் தெரியாமல் திணறியதாகப் பரவும் வீடியோவில் இருப்பது மோடி அல்ல. அது ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் என்பதை அறிய முடிகிறது.