திருமாவளவன் வழங்கிய சால்வையை மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்தினாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மேடை சந்திப்பு ஒன்றில் வி.சி.க தலைவர் திருமாவளவன் வழங்கிய சால்வையை வாங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை அலட்சியப்படுத்தி அங்கிருந்து மேசையில் வைத்ததாக சிறு வீடியோ பகுதியை ” அவ்வளவுதான் போல ” என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அவ்வளவுதான் போல… pic.twitter.com/fWTPcEEsEM
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) March 6, 2022
உண்மை என்ன ?
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விசிக சார்பில் பெற்றிப் பெற்றவர்களுடன் எம்பி திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று உள்ளார்.
இதுகுறித்து எம்பி திருமாவளவன் ட்விட்டரில் பக்கத்தில், ” கடலூர் துணை மேயர், இராணிப்பேட்டை மற்றும் திண்டிவனம் நகர்மன்றத் துணைத் தலைவர்கள் முறையே தாமரைச்செல்வன், ரமேஷ் கர்ணா, இராஜலெட்சுமி ஆகியோரை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். மூவரும் முதல்வரின் வாழ்த்துகளைப் பெற்றனர் ” என மார்ச் 5-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.
கடலூர் துணை மேயர், இராணிப்பேட்டை மற்றும் திண்டிவனம் நகர்மன்றத் துணைத் தலைவர்கள் முறையே தாமரைச்செல்வன், ரமேஷ் கர்ணா, இராஜலெட்சுமி ஆகியோரை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களிடம் அறிமுகப்படுத்தினேன். மூவரும் முதல்வரின் வாழ்த்துகளைப் பெற்றனர். pic.twitter.com/gZg9MqaMDd
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 5, 2022
அந்த ட்வீட் பதிவில் இடம்பெற்ற புகைப்படங்களில் எம்பி திருமாவளவன் மு.க.ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற சால்வையை அணிவித்து இருக்கும் புகைப்படம் இருப்பதை பார்க்கலாம்.
மார்ச் 5-ம் தேதி ” வெற்றியாளர்களை அழைத்து வந்து முதல்வரிடம் வாழ்த்து பெற்ற திருமா ” எனும் தலைப்பில் Mobile Journalism எனும் யூடியூப் சேனலில் அந்நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது.
திருமாவளவன் மஞ்சள் நிற சால்வையை ஸ்டாலினுக்கு அணிவித்து மரியாதை செலுத்தியதற்கு ஏற்ப ஸ்டாலினும் அவரின் கரங்களை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது திருமாவளவன் உடன் வந்த பின்னால் இருப்பவர் அளித்த சால்வையை வாங்கிய ஸ்டாலின் திரும்பி பார்த்து விட்டு மேசையில் வைத்து விடுகிறார். அதன்பின்னர், சால்வை வழங்கியவருக்கும் கைக் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
முடிவு :
நம் தேடலில், திருமாவளவன் தங்கள் கட்சி வெற்றியாளர்களுடன் மு.க.ஸ்டாலினை சந்தித்த போது மற்றொருவர் அளித்த சால்வையை கீழே மேசையில் வைக்கும் காட்சியை மட்டும் எடுத்து திருமாவளவனை மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்தியது போல் தவறாக பரப்பி வருகிறார்கள்.