இரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா ?

பரவிய செய்தி
ஒருவருக்கு கண்ணில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இரவு நேரத்தில் செல்போன் அதிகம் உபயோகித்தது எனக் கூறியுள்ளனர். செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கை !
மதிப்பீடு
சுருக்கம்
அதிகளவில் செல்போன் பயன்பாட்டால் உடலுக்கு தீங்கு உண்டாகும் என கூறினாலும், கண் மற்றும் மூளையில் புற்றுநோய் பாதிப்பு உண்டாகும் என எந்தவொரு ஆய்வும் நிரூபிக்கவில்லை.
விளக்கம்
இரவு நேரங்களில் செல்போன்கள் அதிகம் பயன்படுத்தியதால் கண்ணில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒருவரின் புகைப்படம் பகிரப்படுகிறது. 2016-ல் தொடங்கி பல இணைய பக்கங்கள், சமூக வலைதளங்களில் கற்பனை, கேலி, உடல் ஆரோக்கியம், எச்சரிக்கை என இப்படமும், தகவலும் பதிவிடப்பட்டது.
செல்போன்கள் அதிகம் பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பல நாடுகளில் பல கள ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் 1,600 பேரிடம் நடத்திய ஆய்வில், கண்ணில் மெலனோமா( புற்றுநோயின் ஆக்கிரமிப்பு நிலை) வளர்ச்சி அடைவதற்கான மாற்றங்களுக்கும் வழக்கமாக செல்போன் பயன்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் “ Journal of the national cancer institute “ -ல் எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு ஜெர்மன் ஆய்வு ஒன்றில் செல்போன்களின் அதிகப் பயன்பாட்டால் ஒவ்வொரு 1,00,000 பேரில் சில பேருக்கு கண் புற்றுநோய் பாதிப்பு உண்டாகலாம் என்ற கூற்றை முன்வைத்தனர்.
ஆனால், இதைப்பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த அறிக்கையில், அச்சம் பரவலாக இருந்த போதிலும், புற்றுநோய் உடன் தொடர்பு இருப்பதாக இறுதியான ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டது.
இதற்கு பின், அமெரிக்காவின் புதிய ஆய்வில் செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறுவதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறினர்.
மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறைந்தது 500 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அதிகம் செல்போன்கள் பயன்படுத்துவதில்லை என்றே தெரிவித்து உள்ளனர்.
நீண்ட நாட்களாக அதிகளவில் செல்போன்கள் பயன்படுத்துவதால் கண், மூளை புற்றுநோய் உண்டாகும் என்ற செய்திகள் நீண்டகால அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.
வைரலான படம் ?
ஆங்கிலப் பதிவுகளில் கண் புற்றுநோய்க்கு உதாரணமாக சிவந்த நிறத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படமே அதிகம் பதிவிடப்படுகிறது. ஆனால், சிவந்த கண்கள் கொண்டவருக்கு கண் புற்றுநோய் பாதிப்பு ஏதுமில்லை.
இப்படம் 2013 ஆம் ஆண்டிலேயே sinophoto.com என்ற தளத்தில் பதிவிடப்படுள்ளன. மேலும், இதன் ஒரிஜினல் பதிவில் சீன மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் செல்போன்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை.
அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்கோலோஜி உள்ளிட்டவை செல்போன் பயன்பாட்டால் புற்றுநோய் உண்டாகும் என எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.
இரவு நேரத்தில் அல்லது அதிக அளவில் செல்போன்கள் பயன்படுத்துவது கண் மற்றும் மூளையில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனினும், பார்வை திறன் குறைபாடு பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுத்தல் நல்லது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.