பிரதமர் மோடி 3.5 லட்சம் கோடி டாலர் கடன் பெற அமெரிக்கா சென்றாரா ?

பரவிய செய்தி
இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்திருக்கும் நிலையில் உலக வங்கியிடம் மூன்றரை லட்சம் கோடி டாலர்கள் கடனுதவி கோருவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்.
மதிப்பீடு
விளக்கம்
அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ” இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்திருக்கும் நிலையில் உலக வங்கியிடம் மூன்றரை லட்சம் கோடி டாலர்கள் கடனுதவிக்காக ” சென்றதாக புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
குவாட் அமைப்பின் மாநாடு மற்றும் ஐநா பொதுசபைக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த பயணத்தில் பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை பிரதமர் மோடி சந்தித்த செய்திகளும் வெளியாகின. ஆனால், உலக வங்கியிடம் 3.5 லட்சம் கோடி டாலர் கடனுதவி கேட்க அமெரிக்கா சென்றதாகவோ, உலக வங்கி நிர்வாகிகளை சந்திக்கிறார் என்றோ எந்த தகவலும் இல்லை.
வைரல் செய்யப்படும் புதியதலைமுறை சேனலின் நியூஸ் கார்டில் அமெரிக்கா என்பதற்கு பதிலாக ” அமேரிக்கா ” என இடம்பெற்று இருக்கிறது. இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கும் என புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தில் தேடுகையில் அதே நியூஸ் கார்டில் வேறொரு செய்தி வெளியாகி இருக்கிறது.
” 4 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் நரேந்திர மோடி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ” என வெளியான செய்தியில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : பிரதமர் மோடிக்கு கொரோனா வழிமுறைகளை பயிற்றுவிக்க வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவா ?
முடிவு :
நம் தேடலில், இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்திருக்கும் நிலையில் உலக வங்கியிடம் மூன்றரை லட்சம் கோடி டாலர்கள் கடனுதவி கோருவதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் என பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.