Fact Checkஅரசியல்

பிபிசியின் மோடி ஆவணப்படத்திற்கு எதிராக பிரிட்டன் மக்கள் போராட்டம் எனப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

லண்டனில் பொதுமக்களே தெருவுக்கு வந்து சாக்கடை பிபிசி’யை காறி உமிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். “பிபிசி பொய் சொல்லும் ஒரு சைத்தான்” என்று மக்கள் மேடையில் கூறுவதை கேளுங்க. பாரத பிரதமர் மோடியை பற்றி மிக காழ்ப்புணர்ச்சியுடன் பகிரப்பட்ட நிகழ்ச்சியை UK மக்களே நிராகரித்து விட்டனர்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படத்தினை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணப்படம் காழ்ப்புணர்ச்சியுடன் எடுக்கப்பட்டது என்றும், பிபிசி-யை கண்டித்து லண்டன் மக்கள் வீதிக்கு வந்து மேடையில் கூறுவதைக் கேளுங்கள் என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

Advertisement

அந்த வீடியோவில், கூடியுள்ள மக்கள் ‘SHAME ON YOU’ என முழக்கமிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு மேடையிலுள்ள பெண் ஒருவர் பொய்ச் சொல்லும் பிபிசி, பிபிசி-யை நிறுத்த வேண்டும் என முழக்கமிடுகிறார்.

Archive link 

உண்மை என்ன ?

பிரதமர் மோடி குறித்து பிபிசி கடந்த 17ம் தேதி India: The Modi Question என்ற தலைப்பில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பாகத்தினை வெளியிட்டது. ஆனால், அந்த ஆவணப்படம் பிபிசி இணையதளத்தில் இருந்து இந்திய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டது. பாஜக அரசின் இத்தகைய போக்கு சர்வாதிகாரமானது என அதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் அந்த ஆவணப்படத்தினை வெவ்வேறு தளங்களில் திரையிட்டு வருகின்றனர்.

பாஜகவைச் சேர்ந்தவர்கள் பிபிசியின் ஆவணப் படத்தினை தடை செய்தது சரிதான் என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில், மோடி குறித்து தவறாகச் சித்தரித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி லண்டன் தலைமை அலுவலகத்தை அந்நாட்டு மக்கள் முற்றுகையிட்டுப் போராடியதாக இந்த வீடியோவினை பரப்பி வருகின்றனர்.

Archive link

பாஜகவினரால் பரப்பப்படும் வீடியோவில் Oracle Films’ என வாட்டர் மார்க் இருப்பதினை காண முடிந்தது. இதன் மூலம் கீ வோர்ட்ஸ் கொண்டு இணையத்தில் தேடினோம். Oracle Films’ என்ற டிவிட்டர் பக்கத்தில் ஜனவரி 23ம் தேதி பரவக்கூடிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 

அப்பதிவிலும், Truth be Told London என்ற அமைப்பு பிபிசி அலுவலகத்தின் முன்பாக 2023, ஜனவரி 21ம் தேதி போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்கான போராட்டம் என அப்பதிவில் இல்லை.

Archive link 

மேலும், அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தேடியதில், தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஜனவரி 21ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. அந்நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் Andrew Bridgen என்பவரும் பங்கேற்றுள்ளார்.

கொரோனா காலத்தில் பிபிசி தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டன. ஆனால், தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக Truth be Told London என்ற தடுப்பூசிக்கு எதிரான அமைப்பு போராட்டம் நடத்தியுள்ளது. அப்போது பிபிசிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இப்போராட்டத்தின் முழு வீடியோவை ‘Local Experimentalist UK’ என்ற யூடியூப் பக்கத்தில் காண முடிகிறது. அதில், ஒரு மணி நேரம் 8 நிமிடத்தில் பரவக்கூடிய வீடியோ பகுதியினை காணலாம். இந்நிகழ்வு குறித்து ‘The Independent’ என்ற யூடியூப் பக்கத்திலும் ஜனவரி 21ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு எதிரான அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கத்தினைதான், மோடி குறித்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிபிசி அலுவலகம் முன்பாக லண்டன் மக்கள் போராடியதாகத் தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

முடிவு : 

நம் தேடலில், மோடி குறித்து பொய்யான ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி லண்டன் அலுவலகத்தின் முன்பாக அந்நாட்டு மக்கள் போராடியதாகப் பரப்பப்படும் வீடியோ உண்மை அல்ல. அது தடுப்பூசிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button