இராணுவ வீரர்களுடன் தீபாவளி, காட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. தவறாகப் பரவும் பிரதமர் மோடியின் பேச்சு !

பரவிய செய்தி
கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக அல்லது முதல்வராக இருப்பதற்கு முன்பும் கூட ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 12, 2023 அன்று கூறியது.
ஒவ்வொரு தீபாவளிக்கும் 5 நாட்கள் காட்டில் தங்கியிருந்து வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பேன் – பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ல் கூறியது.
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி இமாச்சலப் பிரதேசத்திலுள்ள லெப்சா கிராமத்தில் எல்லை பாதுகாப்பு பணிகளை செய்து வரும் இந்தோ-திபெத் படையினருடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் “ஒவ்வொரு ஆண்டும் நான் நமது ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன். ராமர் இருக்கும் இடம்தான் அயோத்தி என சொல்லப்படுவது உண்டு.
ஆனால் என்னைப் பொறுத்தவரை பண்டிகை என்பது நமது வீரர்கள் இருக்கும் இடம்தான். கடந்த 30-35 ஆண்டுகளாகவே ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக அல்லது முதல்வராக இருப்பதற்கு முன்பும் கூட ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன்.” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி “ஒவ்வொரு தீபாவளிக்கும் 5 நாட்கள் காட்டில் தங்கியிருந்து தான் தீபாவளி கொண்டாடுவேன்” என்று கூறியிருந்த நிலையில் தற்போது 30-35 ஆண்டுகளாகவே ராணுவ வீரர்களுடன் தான் தீபாவளியைக் கொண்டாடுவதாக அவர் கூறியுள்ளது முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்று கூறி சவுக்கு சங்கர் , திமுகவினர் உட்பட சமூக ஊடகங்களில் பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
Wait a minute…🤔 pic.twitter.com/OiOkHhFDF1
— Cow Momma (@Cow__Momma) November 13, 2023
சத்தியமா சொல்றேன் 35 வருசமா ராணுவ வீரர்களோடதான் தீபாவளி கொண்டாடறேன் – மோடி
இவனுக்கு சத்தியம்னா சக்கரை பொங்கல் மாதிரி 😂😂 pic.twitter.com/iiXXLWsBMg
— ஆதிரன் I.N.D.I.A🇮🇳 (@Aathiraj8586) November 13, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2019 ஜனவரி 23 அன்று ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டி குறித்து The Print கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் அவர், தன்னுடைய இளமைக் காலத்தில் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஐந்து நாட்களை தான் காட்டில் கழித்தது குறித்து அவர் பேசியிருந்ததைக் காண முடிந்தது.
மேலும், “இது பலருக்குத் தெரியாது, ஆனால் நான் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஐந்து நாட்களுக்கு வெளியே செல்வேன். எங்கோ ஒரு காட்டில், மக்கள் நடமாட்டம் இல்லாத சுத்தமான தண்ணீர் மட்டும் இருக்கும் இடத்திற்கு செல்வேன். அந்த ஐந்து நாட்களுக்குத் தேவையான உணவையும் நான் எடுத்து செல்வேன். அங்கு ரேடியோ அல்லது செய்தித்தாள்கள், டிவி, இணையம் எதுவும் இருக்காது என்று மோடி கூறினார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பேட்டியில் அவர் பேசியிருப்பது தன்னுடைய இளமைக்காலம் குறித்த அவருடைய நினைவுகள் என்பதை அறிய முடிந்தது.
தற்போது “கடந்த 30-35 ஆண்டுகளாகவே ராணுவ வீரர்கள் இல்லாமல் நான் தீபாவளியைக் கொண்டாடியது கிடையாது. பிரதமராக அல்லது முதல்வராக இருப்பதற்கு முன்பும் கூட ஏதேனும் ஒரு எல்லைக்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறேன்.” என்று பேசியிருந்தது தொடர்பாகவும் ஆய்வு செய்து பார்த்தோம்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த கடந்த 2014-ஆம் ஆண்டில் சியாச்சினில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். கடந்த 2015-ல், ‘1965 போரில்’ இந்திய ராணுவத்தின் வெற்றிகளை போற்றும் வகையில், அவர் பஞ்சாபில் உள்ள மூன்று நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு தீபாவளி கொண்டாடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து கடந்த 2016-ல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சும்தோவில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையினருடனும், கடந்த 2017-ல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் செக்டாரிலும், கடந்த 2018-ல், உத்தரகாண்டின் ஹர்சிலிலும், கடந்த 2019-ல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரியிலும், கடந்த 2020-ல் லோங்கேவாலாலும், கடந்த 2021-ல் காஷ்மீரின் நவ்ஷேராவிலும், கடந்த 2022-இல் கார்கிலிலும் பிரதமர் மோடி இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் உறுதி செய்ய முடிந்தது.
மேலும் தேடியதில், கடந்த 2009-லும் அவர் சிக்கிமில் இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 73 வயது. 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் அவர் தன்னுடைய 43 அல்லது 38-வது வயதில் இருந்தே இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் 2009-க்கு முன்பு உள்ள வருடங்களில் அவர் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது குறித்து நமக்கு எந்தவித தரவுகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாகப் பரவும் தவறான வீடியோ !
மேலும் படிக்க: சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை எனப் பரவும் தவறான தகவல் !
முடிவு:
நம் தேடலில், கடந்த 30-35 ஆண்டுகளாகவே ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறேன் என்றும், ஒவ்வொரு தீபாவளிக்கும் ஐந்து நாட்கள் காட்டிற்கு செல்வேன் என்றும் மோடி வெவ்வேறு இடங்களில் கூறியிருக்கிறார், அவை முன்னுக்கு பின் முரணானவை என்று கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
அவர் காட்டில் தீபாவளி கொண்டாடியதாகக் கூறியது அவருடைய இளமைக்காலத்தில் நடந்தவை என்பதையும், அதற்கு பின் முதல்வராக இருந்த போதும் கூட அவர் இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.