மோடி சந்திராயனில் தங்கத்தை வைத்து அனுப்பியதாக நையாண்டி பதிவு | யார் பரப்பியது ?

பரவிய செய்தி
சந்திரயான் கிளம்பிய நாள் முதல் இன்று வரை தங்கம் விலை உயர்ந்து வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் தொடர்பு பலருக்கு தெரியாது. தங்கம்தான் உலகின் ஒரே முதலீடு என்பதை புரிந்து கொண்ட நமது பாரத பிரதமர் மோடிஜி, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சந்திரயானில் வைத்து விண்ணிற்கு அனுப்பிவிட்டார்.
இது இஸ்ரோ தலைவர் சிவனுக்கே தெரியாத ரகசியம். அதனால்தான் சந்திரயான் தோல்வி என நினைத்து சிவன் அழும்போதும் கூட மோடிஜி ‘மன்மதன்’ படத்தின் சிம்பு போல சிரித்துக் கொண்டிருந்தார். உலகின் ஒருபாதி தங்கம் விண்ணுக்கு சென்றுவிட்டதால் தங்கம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மோடிஜியிடம் மண்டியிட ஆரம்பித்திருகின்றன.
ஆனால் எல்லாவற்றையும் மறுத்து மோடிஜி தங்கம் முழுவதையும் நிலாவில் சேமித்து வைத்திருக்கிறார். தற்போது இருக்கக்கூடிய பொருளாதார மந்தநிலையில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தோல்வியை ஒத்துக் கொண்ட பிறகு சந்திரனில் இருந்து மொத்த தங்கமும் டெல்லிக்கு கொண்டுவரப்படும். அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை 30 ரூபாய்க்கு குறையும்.
பாரத் மாதா கீ ஜெய்..
மதிப்பீடு
விளக்கம்
பிரதமர் மோடி சந்திராயன் விண்கலத்தில் நாட்டின் தங்கத்தை வைத்து நிலவிற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படும் பதிவை காணுகையில் பலருக்கும் சிரிப்பு வந்து இருக்கும். இதை கூடவா நம்புறீங்க என கிண்டலாக கமெண்ட் செய்தும் உள்ளனர்.
தமிழக பிஜேபி ஆதரவு முகநூல் பக்கங்களில் இப்பதிவு பகிரத் தொடங்கியதால் பிஜேபி ஆதரவாளர் அல்லது பிஜேபி கட்சியை விமர்சனம் செய்பவர்கள் இப்படியான பதிவை பதிவிட்டு இருக்கக்கூடும் என நினைத்தோம்.
balakrishnan என்பவர் முகநூலில் ” மோடி ராணுவம் ” என்னும் முகநூல் குழுவிற்கு பகிர்ந்து இருக்கிறார். ஆனால், இந்த பதிவு முகநூல் முழுவதும் வைரல் ஆகியதால் இதன் தொடக்கம் எங்கே என்று ஆராய்ந்தோம்.
நம்முடைய தேடலில், ” திமுக கட்சியை சேர்ந்த பிரசன்னா இதே பதிவை பகிர்ந்து கீழே நன்றி என ஆதிரா ஆனந்த் என்பவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார் “. அவரின் பதிவை காப்பி செய்து பிரசன்னா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதையடுத்து, ஆதிரா ஆனந்த் என்பவரின் முகநூல் பக்கத்திற்கு சென்று பார்க்கையில் செப்டம்பர் 8-ம் தேதி 3.30 மணியளவில் மோடி குறித்த நையாண்டி பதிவை பதிவிட்டு இருக்கிறார். ஆக, திமுக கட்சியின் சித்தாந்தம் கொண்ட ஒருவரின் மூலமே மோடி குறித்த நையாண்டி தொடங்கி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
இதையறியாமல், பிஜேபி ஆதரவாளர்கள் சிலரும் கூட இதனை உண்மை என நினைத்து முகநூல் குழுக்களில் பகிர்ந்து வருவது வேடிக்கை.