காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த மோடியின் தகவல் சரியா ?

பரவிய செய்தி
10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டியது. ஆனால், 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது-பிரதமர் மோடி.
மதிப்பீடு
சுருக்கம்
கிடைக்கப்பெற்ற தகவலின் படி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரே ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை பற்றிய மோடியின் பேச்சு தவறானவை.
விளக்கம்
இந்தியாவில் வசிப்பவதற்கு வீடுகள் இல்லாமல் இருப்பர்வர்கள் ஏராளமானோர். ஆகையால், 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்குமான வீடு எனும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான உதவிகள் அரசின் தரப்பில் இருந்து செய்யப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகளில்(சில இடங்களில் 5 ஆண்டுகளில்) 25 லட்சம் வீடுகள்(சில இடங்களில் 10 லட்சம்) மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என பிரதமர் மோடி பேசி வருகிறார்.
உண்மையில், மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ” இந்திரா அவாஸ் யோஜனா ” 1996 ஆம் ஆண்டில் ஜனவரில் தொடங்கப்பட்டது. அத்தகைய திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அதே நோக்கத்தில் ” பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின் ” திட்டம் பெயர் மாற்றத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பாக 2013-ல் “ ராஜீவ் அவாஸ் யோஜனா ” திட்டம் இருந்தது.
Annual Report 2012-2013 மற்றும் மேலும பல செய்தி, தகவலின் படி, காங்கிரஸ் கூட்டணியின் 2010-11 மற்றும் 2013-14-க்கு இடைப்பட்ட நிதியாண்டில் மட்டும் 89.65 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போதைய ஆட்சியில் 2014-2015 முதல் 2017-2018 நிதியாண்டு வரையில் நான்கு ஆண்டுகளில் 111.44 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது, ஒரு கோடியே 11 லட்சம் வீடுகளுக்கு பிரதமர் மோடியின் நான்கு ஆண்டுகளில் நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. (image source :Factly)
பிரதமர் மோடி கூறியது போன்று காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டிகளிலோ அல்லது 5 ஆண்டுகளிலோ 25 லட்சம் வீடுகள் மட்டும் கட்டப்பட்டது என்பது தவறான தகவல். எனினும், பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வீடுகள் கட்ட அளிக்கப்படும் நிதி மற்றும் ஒப்புதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது உண்மை. 2017-2018 நிதியாண்டில் 44.5 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதைத் தவிர, பிரதமர் மோடியின் இத்தகைய கூற்று பொய்யானது என கருத்து தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சவான்.
ஆண்டுதோறும் சராசரியாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாஜ்பாய் காலத்தில் ஆண்டிற்கு 11 லட்சம் வீடுகள், UPA 1-ல் ஆண்டிற்கு 17 லட்சம் வீடுகள் மற்றும் UPA 2-ல் 24.7 லட்சம் வீடுகள், தற்போதைய ஆட்சியில் ஆண்டிற்கு 27.86 லட்சம் வீடுகள் சராசரியாக கட்டப்படுகின்றன.
வாழ்வதற்கான வீடு என்பது அனைவருக்குமான கனவாகும் மற்றும் அடிப்படை தேவையும் கூட. ஆக, இனி வரும் அரசுகளும் மக்கள் வசிப்பதற்கான வீடுகளை ஏற்படுத்தி தர வேண்டியதை முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.