உடை, அலங்கார செலவில் பிரதமர் மோடி முதலிடம் எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவு செய்யும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்
மதிப்பீடு
விளக்கம்
மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவு செய்யும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் என இடம்பெற்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 5-ம் தேதி குறிப்பிட்ட கதிர் நியூஸ் பக்கத்தின் இந்த கார்டு, கடந்த மாதத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து தேடுகையில், செப்டம்பர் 2-ம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்கள் ஒப்புதல் ட்ராக்கர் மார்னிங் கன்சல்ட் மூலம் ஆய்வு செய்யப்பட்ட 13 உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதல் மதிப்பீடுகள்(Approval Rating) அதிகம். அவர் 70% உடன் முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே செய்தியில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
கதிர் நியூஸ் பக்கத்தில் தேடுகையில், ” மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம். தி மார்னிங் கன்சல்ட் நடத்திய உலகத் தலைவர்களின் ஒப்புதல் குறித்த ஆய்வின் தகவல் ” என செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் உடை மற்றும் அலங்காரத்திற்காக அதிக செலவு செய்யும் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் என பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.