பிரதமர் மோடி பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாகப் பரவும் தவறான வீடியோ !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்திய மக்களை வறுமையில் தள்ளிவிட்டு எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது. 23 நொடிகள் கொண்ட அவ்வீடியோவில் பிரதமர் மோடியை போல் இருக்கும் நபர் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
80 கோடி இந்திய மக்களை வறுமையில் தள்ளிட்டு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாம எப்படி ஒருத்தனால இப்படி ஆட முடியுது?? 🤦🤦🤦 pic.twitter.com/6eghK82j6H
— ஆரூர்.ஜெய.சுதாகர் (@jsreesudha) November 10, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், அக்டோபர் 17ம் தேதி vikas_mahante எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே நபர் நடனமாடும் வேறொரு வீடியோ கிடைத்தது. அதில், கோரகேந்த்ராவில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சியில் விஐபி கெஸ்ட் ஆக கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
View this post on Instagram
விகாஸ் மஹாந்தே என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தோற்றத்தில் இருக்கும் தொழிலதிபர். இவர் பிரதமர் மோடியாக இரு திரைப்படங்களில் நடித்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி வேடத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
மேலும், வைரல் செய்யப்படும் வீடியோவில் இடம்பெற்ற அதே நடன பெண்கள் உடன் விகாஸ் மஹாந்தே உரையாடுவது போன்ற வீடியோ 2 நாட்களுக்கு முன்பாக அவரது பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இது லண்டனில் நடந்த தீபாவளி மேளாவில் விஐபியாக கலந்து கொண்டதாக வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடியை போன்று தோற்றத்தில் இருக்கும் பலரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேபோல், அவர் தோற்றத்தில் உள்ள நபர்களை அவரது சகோதரர்கள் என தவறான செய்திகள் பரவி உள்ளன.
மேலும் படிக்க : இவர் பிரதமர் மோடியின் சகோதரரா ?
முடிவு :
நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடி மேடையில் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடுவதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் உள்ள நபர் பிரதமரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் நடிகர் விகாஸ் மஹாந்தே என்பதை அறிய முடிகிறது.