மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைப் பாதியாகக் குறைப்போம் என பிரதமர் மோடி கூறினாரா ?

பரவிய செய்தி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம் – பிரதமர் நரேந்திர மோடி.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளோம் என பாஜக அரசு கூறிக் கொண்டாலும், அவற்றின் விலையானது 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் பார்வை குஜராத் மாநிலத்தின் மீது உள்ளது.

இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாக ட்ரோல் செய்யப்படும் மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம்” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகப் பரப்பப்படும் மீம் பதிவில் இந்தியா 7 நியூஸ் எனும் நியூஸ் கார்டு ஒன்றை வைத்தே மீம் உருவாக்கி இருக்கிறார்கள்.

Facebook link 

ஆகையால், இந்தியா 7 நியூஸ் முகநூல் பக்கம் குறித்து தேடுகையில், ” 2018ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல், பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம் என பிரதமர் மோடி ” கூறியதாக இந்த நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது. 2019ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.

2018-ல் பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் எனக் கூறினாரா எனத் தேடுகையில், அவ்வாறான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, இந்த நியூஸ் கார்டு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தான் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ2.50 ஒன்றிய அரசு குறைத்துள்ளதை அடுத்து பாஜக ஆளும் மாநில அரசுகள் லிட்டருக்கு 2.50ரூ வரை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பின் போது பிரதமர் மோடி அதற்கான விளக்கத்தை அளித்த செய்திகள் வெளியாகி இருக்கிறது. நேரடியாக, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்போம் என பிரதமர் மோடிக் கூறியதாக தமிழ், ஆங்கிலம் என எந்த செய்திகளும், அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க : பெட்ரோல் விலை ரூ100… பிரதமர் மோடி சொல்லும் காரணம் !

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான நிலைபாட்டைக் கொண்ட பாபா ராம்தேவ், ” அரசு அனுமதி அளித்தால், பெட்ரோல் டீசலை லிட்டருக்கு ரூ.35-40க்கு என்னால் விற்பனை செய்ய முடியும் ” எனத் தெரிவித்ததாக 2018 செப்டம்பர் 17ம் தேதி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல் குமாரை தொடர்புக் கொண்டு பேசுகையில், ” இது பொய்யான செய்தி ” எனத் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி 2014ல் ஆட்சியைப் பிடித்த பின்பு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பலமுறை மாற்றியமைத்து, 10ரூபாயாக இருந்த வரியை லிட்டருக்கு 32ரூபாய் வரை உயர்த்தி இருந்தார். கடைசியாக பாஜக அரசு, 2022 மே மாதம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசலுக்கு ரூ.6 வரை கலால் வரியைக் குறைத்து இருந்தது.

மேலும் படிக்க : 2014-22ல் எரிபொருள் மூலம் ஒன்றிய அரசு வசூலித்த மொத்த வருமானம் 26 லட்சம் கோடி !

முடிவு : 

நம் தேடலில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு தவறானது. மோடி அப்படி கூறியதாக எந்த தகவலும் இல்லை. அது கடந்த 2018ல் இருந்தே பரவி வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader