சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடி சிலை எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
பத்தரை மாத்து தங்கம் இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயதெய்வம். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உடைய மார்பளவு சிலை பத்தோன்பதரை பவுனில் அதுவும் சவுதி அரேபியாவில். பார்க்கவே பரவசமாக இருக்கிறது அல்லவா
மதிப்பீடு
விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலை சவுதியானது அரேபியாவில் 19.5 பவுன் (சவரன்) தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
பத்தரை மாத்து தங்கம் இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயதெய்வம்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உடைய மார்பளவு சிலை
பத்தோன்பதரை பவுனில் அதுவும் சவுதி அரேபியாவில்பார்க்கவே பரவசமாக இருக்கிறது அல்லவா@narendramodi @PMOIndia pic.twitter.com/bj5yZ3Lr4w
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) September 12, 2023
உண்மை என்ன ?
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடியின் சிலை தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதாக எஸ்.ஆர்.சேகர் பதிவிட்டிருந்த வீடியோ குறித்து முக்கிய வார்த்தைகளை (Key words) கொண்டு இணையத்தில் தேடியதில், அது குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள நகைக்கடைக்காரர் செய்தது என்பதை அறிய முடிந்தது.
கடந்த ஜனவரி 15ம் தேதி ‘இந்து தமிழ் திசையில்’ தங்கத்தால் செய்யப்பட்டிருந்த மோடி சிலை குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அச்செய்தியில், ‘கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் (2023, ஜனவரி) மும்பையில் தங்க, வைர நகை கண்காட்சி நடைபெற்றது. அதில், 156 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட மோடியின் சிலை இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த சிலை குறித்து எந்த விவரமும் கண்காட்சியில் வெளியிடப்படவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்திலும் இது தொடர்பான செய்தி கிடைத்தது. கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியான அச்செய்தியில், சூரத்தில் உள்ள ‘Radhika chains’ உரிமையாளர் பசந்த் போஹ்ரா என்பவர் 4.5 அங்குல நீளம் மற்றும் 3 அங்குல அகலம் கொண்ட மோடியின் சிலையை 156 கிராம் தங்கத்தில் செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விதமாக இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ‘Jansatta’ என்ற யூடியூப் பக்கத்திலும் பசந்த் போஹ்ரா அளித்த நேர்காணல் வீடியோவும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தங்கத்தால் செய்யப்பட்ட மோடியின் மார்பளவு சிலை சூரத்தில் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், சவுதி அரேபியாவில் தங்கத்தால் செய்யப்பட்ட மோடியின் மார்பளவு சிலை என பாஜகவினர் பரவும் தகவல் உண்மை அல்ல. அது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நகை வியாபாரி ஒருவர் செய்தது என்பதை அறிய முடிகிறது.