This article is from Sep 18, 2021

நரேந்திர மோடி மிகவும் நல்லவர் எனக் கருணாநிதி கூறினாரா ?

பரவிய செய்தி

குஜராத்தை சிறப்பாக மேம்படுத்தியுள்ளார். நரேந்திர மோடி மிகவும் நல்லவர். கருணாநிதி பரபரப்பு பேட்டி !

மதிப்பீடு

விளக்கம்

மறைந்த திமுகத் தலைவர் கருணாநிதி தன்னுடைய பேட்டியில் நரேந்திர மோடி மிகவும் நல்லவர், குஜராத் மாநிலத்தை சிறப்பாக மேம்படுத்தியுள்ளார் எனக் கூறியதாக செய்தித்தாளில் வெளியான பக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பிலும், கமெண்ட்களிலும் கேட்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி அவர்கள் நரேந்திர மோடியை புகழ்ந்ததாக 2013 டிசம்பர் 20-ம் தேதி வெளியான செய்தியில், “டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு கருணாநிதி அளித்த பிரத்யேக பேட்டியில், மோடியைப் பற்றி கேட்டப் போது, எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மோடி ஒரு நல்ல மனிதர் மற்றும் அவரது மாநிலத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துள்ளார். அவர் ஒரு நிர்வாகியாக தனது திறன்களை நிரூபித்துள்ளார். எனவே, குஜராத்தில் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அவர் தேசத்தை ஆள தகுதியானவரா என்பதை வாக்காளர்களே முடிவு செய்ய வேண்டும் ” எனப் பேசியதாக வெளியாகி இருக்கிறது.

மோடியை புகழ்ந்து கருணாநிதி அளித்த பேட்டி டெல்லி மற்றும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் பேச்சால் கூட்டணி குறித்த குழப்பம் திமுக உள்ளே உண்டானதால் தன்னுடைய பேச்சு குறித்து கருணாநிதி விளக்கம் அளித்தார்.

அதே நாள் (2013 டிசம்பர் 20-ம் தேதி) கருணாநிதியின் முகநூல் பக்கத்தில், “கூட்டணி குறித்து விளக்கம் : தி.மு.கழகப் பொதுக் குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும்போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க. வுடனும் தி.மு. கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசி, அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள். ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும். எனவே பத்திரிகையாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப்பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ” என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், 2013ம் ஆண்டு டிசம்பரில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நரேந்திர மோடி நல்ல மனிதர், குஜராத் மாநிலத்தின் நிர்வாகியாக தனது திறன்களை நிரூபித்துள்ளார் என தனிப்பட்ட கருத்தை டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசியுள்ளார். அது கூட்டணி குறித்து குழப்பத்தை உருவாக்கவே அக்கருத்து கூட்டணி தொடர்பானது அல்ல எனும் விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார் என அறிய முடிகிறது.
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader