This article is from Jul 07, 2019

பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்ததா ?

பரவிய செய்தி

முதல்வர் மோடியால் திட்டமிடப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலம் மூன்று மாதத்திலேயே இடிந்து விழுந்து உள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர்-ஜூனாகாத் நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாலமானது மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து உள்ளதாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இடிந்த பாலத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வட இந்தியாவில் வைரலாகிய பதிவு தற்பொழுது தமிழகத்திலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே குற்றச்சாட்டை மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 20-ம் தேதி பதிவிடப்பட்டு இருந்தது.


மேலும், மத்தியப் பிரதேச காங்கிரஸ் சவடல் எனும் ட்விட்டர் பக்கத்திலும் ஜூன் 21-ம் தேதி பாலத்தின் படங்களை பதிவிட்டு இருந்தனர். இதைத் தவிர்த்து பல ட்விட்டர் கணக்குகள் மோடி திறந்து வைத்த பாலமானது இடிந்ததாக பதிவிட்டு இருந்தனர்.

உண்மை என்ன ?

குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்தது என்ற செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்தோம். முதலில் பிரதமர் திறந்து வைத்த பாலம் இடிந்தது குறித்து செய்திகள் வெளியாகியதாக என தேடி பார்த்தோம். அப்படியொரு சம்பவம் நடந்து இருந்தால் மிகப்பெரிய அளவில் செய்தியாகிருக்க வேண்டும். ஆனால், அப்படியான செய்திகள் வெளியாகவில்லை.

அடுத்ததாக, இந்தியா டுடே இணைய செய்தியில் ஜூன் 21-ம் தேதி ஜாம்நகர்-ஜூனாகாத் நெடுஞ்சாலை அருகே இருக்கும் பாலம் இடிந்து விழுந்தது குறித்து வெளியிட்டு இருந்தனர். அதில், ஜூன் 19-ம் தேதி ஜாம்கண்டோர்னா தாலுக்காவில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் சதுதாத் எனும் கிராமத்திற்கு அருகே அமைந்து இருக்கும் ஜாம்நகர்-ஜூனாகாத் சாலையின் பாலம் இடிந்து உள்ளது. ஆனால், அந்த பாலம் பிரதமர் மோடியால் மூன்று மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்படவில்லை என தெரிவித்து உள்ளனர்.

” சப்-டிவிசினல் மஜிஸ்திரேட்(SDM) ஜிகே மியானி, இடிந்த பாலமானது 50 ஆண்டுகள் பழமையான பாலம் என உறுதிப்படுத்தி இருந்தார் ” .

இது குறித்து பொறியாளர் ஜேவி.ஜோஷி கூறுகையில், ” இந்த பாலம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாலம். அன்றைய காலத்தில் பொதுவாக கட்டப்படுவது போன்று பெரிய கற்களை கொண்டு பாலத்தை கட்டியுள்ளனர். அதன் கட்டுமானத்தை புகைப்படத்தில் தெளிவாக பார்க்கலாம் ” என கூறியுள்ளார்.

இடிந்து இருக்கும் பாலமானது 50 ஆண்டுகள் பழமையான பாலம் எனவும், அதனை பிரதமர் மோடி திறந்து வைக்கவில்லை எனவும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகளும் தெரிவித்து உள்ளனர்.

முடிவு :

குஜராத் ஜாம்நகர்-ஜூனாகாத் சாலையில் இருக்கும் பாலம் இடிந்து உள்ள செய்தி உண்மையே. ஆனால், அப்பாலமானது நரேந்திர மோடி முதல்வராக இருக்கும் பொழுது திட்டமிடப்பட்டு பிரதமர் ஆகிய பிறகு திறந்து வைக்கப்படவில்லை.

40 முதல் 50 ஆண்டுகள் பழமையான பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என தவறான செய்தியை பகிர்ந்து உள்ளனர். அரசியல் சார்ந்த புரளிகள் இந்திய அளவில் வைரலாகும் என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணமாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader