பிரதமர் மோடி கேமராவிற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா ?

பரவிய செய்தி
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – கேமராவில் கண் வையடா தாண்டவக் கோனே. கேமராவுக்காக மனிதர்களை அவமதிக்கும் ஒரு மானங்கெட்ட பிரதமர்.
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவின் புதியக் குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், ஜூன் 23ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
அப்போது, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி கேமராவை பார்த்துக் கொண்டு அவமதித்ததாக 6 நொடிகள் கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்?! pic.twitter.com/KjftxDc0Tn
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) July 24, 2022
உண்மை என்ன ?
ஜூன் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாய்டு ஆகிய இருவரும் வரிசையாக அங்குள்ளவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டு செல்லும் முழுமையான வீடியோ சன்சாத் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.
8 நிமிட வீடியோவில் 55 வது நொடியில் பிரதமர் மோடிக்கு வணக்கம் வைக்க அவரும் வணக்கம் தெரிவிக்கிறார். அதன்பின்னர், பிரதமர் மோடிக்கு பின்னால் இருக்கும் நபருக்கு அவர் வணக்கம் வைக்கும் காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: கேமராவை மறைக்காம பின்னாடி நகருங்க.. வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ !
இதற்கு முன்பாக, ஜூன் 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி கேமராவை மறைக்கும் நபரை பின்னோக்கி செல்ல சொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி கேமராவிற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதித்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானது. முழுமையான வீடியோவில் பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் வைத்த காட்சி இடம்பெற்று இருக்கிறது என்றும், அதன்பின் எடுக்கப்பட்ட காட்சியை கட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என்றும் அறிய முடிகிறது.