மோடி அடுத்த லீ குவான் யூ என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா ?

பரவிய செய்தி
சிங்கப்பூர் தேசத்தை எப்படி லீ குவான் யூ உருவாக்கினாரோ அதேபோல் இந்தியாவை மோடி உருவாக்குவார். எனவே, மோடி இந்தியாவின் லீ குவான் யூ என்று சிங்கப்பூர் நாளிதழில் வெளிவந்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்கிறது. ஆகையால், மோடி இந்தியாவின் லீ குவான் யூ என்று “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் நவம்பர் 10, 2016-ம் ஆண்டு வெளியான செய்தியாகும்.
விளக்கம்
இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 8, 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தக் காலக்கட்டத்தில் மோடியின் பணமதிப்பிலக்கம் பற்றிய ஓர் கட்டுரை “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகியது.
அக்கட்டுரையில் கூறியதாவது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சி தகவலானது பிரதமர் மோடி அவர்களால் நவம்பர் 8-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. மோடியின் இந்த அறிவிப்பானது மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் மாற்றப்பட்டு உர்ஜீத் படேல் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், நவம்பர் 30-ம் தேதிக்குள் நிலைமை சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கமின்றி நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்லும் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை அனைவரும் செலுத்த வேண்டும் என்று அரசை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமரின் செயல்திட்டங்கள் சிங்கப்பூர் அரசின் தலைவர் லீ குவான் யூ-விற்கு இணையாக உள்ளது. தேசத்தை உருவாக்க தற்போது பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கையால், இந்தியாவில் புதிய லீ குவான் யூ பிறந்துள்ளார் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இவ்வாறு, “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரையில் பிரதமர் மோடி பற்றிக் கூறப்பட்டதை சிங்கப்பூர் நாட்டின் நாளிதழில் வெளியாகியது என்று தவறானச் செய்தியாக சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.