மோடி மேக்கப் செலவிற்கு மாதம் 15 லட்சம் என வைரலாகும் வதந்தி!

பரவிய செய்தி
நரேந்திர மோடி பிரதமராக இருந்து நாட்டை நிர்வகிக்க நம் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மாத சம்பளம் 1.6 லட்சம்! மக்கள் வரிப்பணத்தில் மேக்கப் போடும் பெண்ணிற்கு மோடி கொடுக்கும் மாத சம்பளம் ரூ.15 லட்சம் .
மதிப்பீடு
சுருக்கம்
மேக்கப் செய்யும் பெண்ணிற்கு மாதம் 15 லட்சம் வழங்குவதாக பரவியது வதந்தி என செய்திதாளில் வெளியான செய்தியை வைத்தே மீண்டும் வதந்தியை பரப்பியுள்ளனர் என்பது ஆச்சரியம்.
விளக்கம்
2014-ல் இருந்தே பிரதமர் மோடியின் உடை மற்றும் அலங்காரம் ஆகியவை அதிகம் பேசப்படுபவையாக அமைந்து விடுகிறது. பிரதமர் மோடி தனக்கு மேக்கப் செய்யும் பெண்ணிற்கு மாதம் 15 லட்சம் ஊதியம் வழங்குவதாக எனப்படும் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதனை வதந்தி என குறிப்பிட்டு செய்தித்தாள் ஒன்றில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட செய்தியை வைத்தே பிரதமர் மோடி தனக்கு மேக்கப் செய்வதற்கு மாதம் 15 லட்சம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்குவதாக சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.
பிரதமருக்கு அலங்காரம் செய்வது போன்று அருகில் இருக்கும் பெண் பிரதமர் மோடியின் நிறம், தோற்றம் உள்ளிட்ட அளவீடுகளை செய்கிறாரே தவிர அவருக்கு அலங்காரம் செய்யவில்லை.
2016-ல் Madame Tussauds Wax Museum-ஐ சேர்ந்த கலை வடிமைப்பாளர்கள் பிரதமர் இருப்பிடத்திற்கு வந்து அளவீடுகளை எடுத்துக் கொண்டு மற்றும் பிரதமர் உருவில் மெழுகு பொம்மையை உருவாக்கும் பணிக்கான தகவலையும் பெற்றுக் கொண்டனர். அப்படத்தில் இருக்கும் பெண் மோடியின் கண் நிறத்திற்கு ஏற்ற கண் உறுப்பை தேர்வு செய்து கொண்டு இருக்கிறார்.
அப்பணிகள் Madame Tussauds Singapore வெளியிட்ட வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் மெழுகு சிலை Madame Tussauds Wax Museum-ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதையறியாமல், மீண்டும் மீண்டும் தவறான செய்தியையே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.