This article is from Apr 08, 2019

மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு மன்மோகன்சிங்கை விட குறைவா ?

பரவிய செய்தி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு மன்மோகன்சிங்கை விட குறைவே.

மதிப்பீடு

சுருக்கம்

பிரதமர் மோடி பயணித்த 6 பயணங்களுக்கான தொகை  இன்னும் செலுத்தப்படவில்லை. அதற்குள் ஒப்பீடு செய்வது பொருந்தாத ஒன்று. பிரதமர் மோடி  மற்றும் மன்மோகன்சிங் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை, மொத்த செலவுகள் உள்ளிட்டவையை விரிவாக காண்போம்.

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது எல்லாம் அதிகளவில் விமர்சனங்கள் எழும். இந்நிலையில், தற்போது உள்ள தேர்தல் தருணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இடையே யார் அதிக அளவில் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டு உள்ளனர் என பதிவிடப்படுகிறது.

அதில், மன்மோகன்சிங் மேற்கொண்ட 38 பயணங்களுக்கு ரூ.493 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதே, பிரதமர் மோடி 44 பயணங்களுக்கு ரூ.443 கோடி மொத்தம் செலவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இந்த ஒப்பீடு பற்றி பிரதமர் அலுவலகம், செய்திகளில் வெளியான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களில் இருந்து எழுதப்படுகிறது.

மோடி vs மன்மோகன்சிங் :  

2018 ஜூலை 28-ம் தேதி Economic Times  செய்தியில், மன்மோகன்சிங் ஆட்சியில் 2009-2013-க்கு இடைப்பட்ட ஆண்டு மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியில் 2014-2018-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பிரதமர்களின் வெளிநாட்டு பயணச் செலவு பற்றி ஒப்பீடு செய்து வெளியிட்டனர். இது நான்கு ஆண்டுகளுக்கான ஒப்பீடு மட்டுமே!

UPA-2 ஆட்சியில் 2009-2013-க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்ட 31 பயணங்களின் செலவு ரூ.386.35 கோடியாகும், பிஜேபி ஆட்சியில் 2014-2018-க்கு இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி பயணித்த 36  வெளிநாட்டு பயணங்களின் செலவு ரூ.387.26 கோடியாகும். இதில், மன்மோகன்சிங்கை விட மோடியின் பயணச் செலவு 91 லட்சம் அதிகமாகும்.

” நான்கு ஆண்டுகள் ஒப்பீட்டில் பிரதமர் மோடியே முன்னிலையில் இருக்கிறார் “

அடுத்து, ஐந்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மன்மோகன்சிங் 38 பயணங்களை மேற்கொண்டு உள்ளார்.  மன்மோகன்சிங் பயணித்த 38 பயணங்களுக்கான செலவு 493 கோடியாகும்.  இதில் அனைத்தும் Chartered Air India AirCraft மூலமே பயணித்து உள்ளார்.

www.pmindia.gov.in என்ற தளத்தில் பிரதமர் மோடி 2014 மே முதல் 2019 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் மொத்தம் 49 சர்வதேச பயணங்கள் மேற்கொண்டதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும், அந்த பயணங்களில் 6 முறை  IAF BJJ Aircraft பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 6 பயணங்களுக்கு “ Bill Not Received ” என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு இன்னும் பணம் செலுத்தவில்லை.

பிரதமர்கள் பயணிக்கும் Chartered Air India AirCraft-க்கான ஆண்டு பராமரிப்பு செலவு தொகை பயணச் செலவுடன் இணைக்கப்பட வேண்டும். ஒரு ஆண்டிற்கு பராமரிப்பு செலவு ரூ.220 கோடி வரை Air Indiaமூலம் பெறப்படுகிறது. இந்த தொகை காங்கிரஸ் ஆட்சியில் குறிப்பிடப்பட்ட பராமரிப்பு தொகையாகும்.

பிரதமர்களின் மொத்த செலவு : 

2018 டிசம்பர் 28-ல் India today-வில் வெளியான செய்தியில், இந்திய பிரதமர்களின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்து வெளியிட்டு உள்ளனர். அதில், பிரதமர் மோடி பயணித்த 92 நாடுகளுக்கான(மீண்டும் மீண்டும் பயணம்) மொத்த செலவு ரூ.2,021  கோடியாகும்.

UPA 2-வில் மன்மோகன்சிங் பயணித்த 50 நாடுகளுக்கான மொத்த செலவு(மீண்டும் மீண்டும் பயணம்) ரூ.1,350 கோடி எனக் குறிப்பிட்டு உள்ளனர். இந்த தகவல் மத்திய அமைச்சர்(Minister of  state for External Affairs) விகே.சிங் அளித்த தகவலாகும்.

பிரதமர் மோடியின் ஒரு பயணத்திற்கான செலவு 22 கோடி, ஆனால் மன்மோகன்சிங் ஒரு பயணத்திற்கான செலவு ரூ.27 கோடி. இதற்கு காரணம், பிரதமர் மோடி அங்கு தங்கிருந்த நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் என்கிறது PMO ஆதாரங்கள்.

முடிவு : 

UPA-1 ஆட்சியில் மன்மோகன்சிங் பயணித்த 34 பயணங்களுக்கான செலவு 292 கோடி. UPA-2 ஆட்சியில்  5 ஆண்டுகளில் மன்மோகன்சிங் பயணித்த 38 பயணங்களுக்கான செலவு 493 கோடியாகும். இந்த தகவல் மீமில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 வரையில் பிரதமர் மோடி பயணித்த மொத்த பயணங்கள்  44 எனவும், அதற்கான  செலவு 443 கோடி எனச் செய்திகளில் கூட கூறினாலும், தற்போது அவர் பயணித்த மொத்த வெளிநாட்டு பயணம் 49, அதில் 6 நாடுகளின் பயணங்களுக்கு இந்திய அரசு பணம் இன்னும் செலுத்தவில்லை என்பதனை அறியாமல் பிரதமர் மோடியின் பயணச் செலவு குறைவு எனக் கூறுவது தவறான தகவல்.

2018 அக்டோபரில் மோடி ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அதற்கான செலவுத் தொகை இன்னும் அளிக்கப்படவில்லை. 2016-ல் மோடி ஜப்பான் சென்ற பயணத்தின் செலவு 13 கோடி என Pmindia.gov.in -ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மீம் பதிவில் கூறியது போன்று ஒரு பயணத்திற்கு 10 கோடி என்று வைத்தாலும் மோடியின் பயணச் செலவு 500கோடி என முன்னிலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

5 ஆண்டுகளில் இரு பிரதமர்களின் அயல்நாட்டு பயணங்கள் மற்றும் செலவை ஒப்பிடும் பொழுது முழுவதுமாக ஒப்பிடப்பட வேண்டும். சில நாடுகளின் பயணங்களுக்கு இன்னும் அரசு பணம் செலுத்தவில்லை என்பதால், அதை செலுத்தும் பொழுது பிரதமர் மோடியின் பயண செலவே அதிகமாக இருக்கும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader