மோடி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாகக் கன்னட பத்திரிகை செய்தி வெளியிட்டதா?

பரவிய செய்தி

1992 ஆம் ஆண்டு கன்னட பத்திரிக்கையான தரங்காவிற்கு தான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்று பேட்டி கொடுத்த இவரையும் இந்த பொறியாளர் தினத்தில் நினைவு கூர்வோம்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து நீண்ட காலமாகச்  சர்ச்சைகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் மோடியின் சான்றிதழ் கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. 

Archive link 

இந்நிலையில் பிரதமர் மோடி தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாக 1992ம் ஆண்டு வெளியான கன்னட பத்திரிக்கை ‘தரங்காவில்’ (Taranga) குறிப்பிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கபில் எனப் பலரும் பரப்பி வருகின்றனர்.

Archive link 

Archive link 

இதே செய்தி 2016 மற்றும் 2020ம் ஆண்டுகளிலும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

உண்மை என்ன ?

கன்னட பத்திரிக்கையான தரங்காவில் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு குறித்து வெளியான செய்தி கன்னடம் உள்ளது. கூகுள் உதவியுடன் அதனை மொழி பெயர்த்துப் படித்தோம். 

அதில், ‘40 வயது இளைஞரான நரேந்திர மோடி குஜராத் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்து, அம்மாநிலத்தில் மகத்தான வெற்றிக்குப் பின்னால் முக்கிய சக்தியாக இருக்கிறார். மாணவர் பருவத்திலிருந்தே வலுவான ஒருங்கிணைப்பாளராக மோடி கருதப்படுகிறார். சௌராஷ்டிரா பிரிவின் சங்கத் தலைவராக இருந்த மோடி பொறியியல் பட்டதாரி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள செய்தி குறித்து கன்னடம் தெரிந்தவரிடமும் உறுதி செய்தோம்.

அந்த செய்தியில் உள்ள தகவல் மோடி நேரடியாகத் தன்னைப் பற்றிக் கூறியது அல்ல. அவரைப் பற்றி வேறு யாரோ ஒருவர் எழுதியது. மேலும் அதில் பொறியியல் பட்டதாரி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் மோடி தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாக நேர்காணலில் கூறியுள்ளார் எனப் பரப்பி வருகின்றனர்.

மேலும் பரவக் கூடிய புகைப்படத்தில் ‘பக்க எண் 24, தரங்கா, 1992ம் ஜனவரி 26’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் ராஜலக்ஷ்மியை ‘யூடர்னில்’ இருந்து  தொடர்பு கொண்டு பேசினோம். 

அவர் கூறியது, “அந்த செய்தி தங்களது பத்திரிகையில் வெளியாகவில்லை.  மேலும், அக்கால கட்டத்தில் தரங்கா பத்திரிகையில் சந்தோஷ் குமார் குல்வாடி என்பவர் ஆசிரியராக இருந்தார்” என்றும் கூறினார்.

மோடியின் பட்டப்படிப்பு குறித்து மேற்கொண்டு தேடியதில், பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், குஜராத் (அகமதாபாத்) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் (Entire Political Science) பயின்றதாக இரண்டு சான்றிதழ் நகல்களை அமித்ஷா மற்றும் அருண் ஜெட்லி செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தனர். அச்சான்றிதழ்கள் பாஜகவின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான (Original) சான்றிதழைக் காண்பிக்கவில்லை. 

Archive link 

அச்சான்றிதழ்கள் வெளியானபோது அது குறித்த விமர்சனங்களும் வெகுவாக எழுந்தது. மோடி இளங்கலை படித்ததாகக் கூறப்பட்ட 1978ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த வேறு ஒருவரின் பட்டப் படிப்பு சான்றிதழை ஒப்பிட்டு ‘தி க்வின்ட்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

Archive link 

அதில், “மோடியின் டெல்லி பல்கலைக்கழக சான்றிதழில் கோதிக் (Gothic) எழுத்துருக்கள் (Font) உள்ளது. அவரது சமகாலத்தில் படித்தவரின் சான்றிதழில் சாதாரண எழுத்துருக்களே உள்ளது. அப்பல்கலைக்கழகம் 1983, 84ம் ஆண்டு கோதிக் எழுத்துருவிற்கு மாறும் வரையில் சாதாரண எழுத்து வடிவிலேயே பயன்படுத்தி வந்துள்ளது. 

அதேபோல் 1970களின் பிற்பகுதியில் டெல்லி பல்கலைக் கழகத்தில் பாடவாரியான மதிப்பெண் கையால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், மோடியின் சான்றிதழில் அப்படி இல்லை. மேலும் மாணவரிடம் சான்றிதழ் அளிப்பதற்கு முன்பாக, அதனைப் பரிசோதித்தவரின் கையொப்பம் தெளிவாக இல்லை என பல்வேறு கேள்விகள் அக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள ராஜீவ் சுக்லா பத்திரிக்கையாளராக இருந்த போது மோடியை நேர்காணல் செய்துள்ளார். அதில், தான் பள்ளிப் படிப்பை முடித்ததும் 17 வயதில் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகக் கூறுகிறார். அப்போது ராஜீவ் சுக்லா குறுக்கிட்டுத் தொடக்கப் பள்ளியா? எனக் கேள்வி எழுப்புகிறார். இல்லை உயர்நிலைப் பள்ளி (High School) என மோடி பதில் அளிக்கிறார்.

மேற்கொண்டு தான் தொலைதூரக் கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப்  பட்டப் படிப்பு படித்ததாகவும், கல்லூரி சென்றதில்லை என்றும் கூறுகிறார். இப்படி மோடியின் பட்டப்படிப்பு குறித்து, மோடியும் பாஜகவும் இதுவரையில் கூறியவை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மட்டும்தான். எந்த இடத்திலும் தான் பொறியில் படித்ததாகக் குறிப்பிடவில்லை.

மேலும் படிக்க : பிரதமர் நரேந்திர மோடி “படிக்காத மேதை”.. படித்தாரா, இல்லையா ?!

எதிர்க் கட்சியினர் மோடியின் கல்வி சான்றிதழ் குறித்து கேள்விகளை எழுப்பி வருவது ஒருபக்கம் இருக்க, பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ‘படிக்காத மேதை நரேந்திர மோடி’ எனப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்ததாகக்  கன்னட பத்திரிக்கை தரங்காவில் கூறியுள்ளார் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது மோடியைப் பற்றி வேறொரு நபர் எழுதியது. அதுமட்டுமின்றி அச்செய்தி  தரங்காவில் வெளியாகவில்லை என அப்பத்திரிக்கையின் ஆசிரியர் கூறியுள்ளார். மோடியும் தான் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயின்றதாகவே தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader